“மத மோதல்களை தூண்டுவோர் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்” முதல்-அமைச்சர் பேச்சு


“மத மோதல்களை தூண்டுவோர் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்” முதல்-அமைச்சர் பேச்சு
x
தினத்தந்தி 11 May 2022 12:08 AM GMT (Updated: 2022-05-11T05:38:45+05:30)

கூலிப்படை ஆதிக்கம் விரைவில் ஒழிக்கப்படும் என்றும், மத மோதல்களை ஏற்படுத்துவோர் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என்றும் சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து, நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈவு இரக்கமின்றி நடவடிக்கை

கொடுங்குற்றங்கள் தொடர்பாகவும், கூலிப்படைகள் விஷயத்திலும் ஈவு இரக்கமின்றி இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் 2020-ம் ஆண்டு மே மாதம் முதல் 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடைபெற்ற கொலைகள் 1,695. கடந்த ஓராண்டு காலத்தில் நிகழ்ந்துள்ள கொலைகள் 1,558. கொள்ளை அ.தி.மு.க. ஆட்சியில் 146. தற்போது அது 103 ஆக குறைந்துள்ளது. கூலிப்படைகளின் அட்டகாசத்திற்கு இந்த அரசு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

ஏனென்றால், அ.தி.மு.க. ஆட்சியில் 2020-ம் ஆண்டு மே மாதம் முதல் 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 30 கூலிப்படை கொலைகள் நிகழ்ந்துள்ளன. ஆனால், இந்த ஆட்சியில் அது 18 ஆக குறைக்கப்பட்டு கூலிப்படைகளின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் முற்றிலும் ஒழிக்கப்படும்.

துப்பாக்கி சூடு சம்பவம்

அ.தி.மு.க. ஆட்சியின் கடைசி இரு ஆண்டுகளில் 16 போலீஸ் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. அதில் ஒன்றுதான் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம். ஆனால், தி.மு.க. ஆட்சியில் அந்த நிலை ஏற்படவில்லை. எங்கும் எந்த சூழலிலும் துப்பாக்கி சூடு என்பது ஏற்படவே இல்லை.

காவல் நிலையங்களில் ஏற்படக்கூடிய மரணங்களைப் பொறுத்தவரையில், என்னிடம் உள்ள புள்ளிவிவரங்களின்படி, 2017-ம் ஆண்டு 8 பேரும், 2018-ம் ஆண்டு 12 பேரும், 2019-ம் ஆண்டு 11 பேரும், 2020-ம் ஆண்டு 6 பேரும், 2021-ம் ஆண்டு 5 பேரும், 2022-ம் ஆண்டு இதுவரை 4 பேரும் உயிரிழந்திருக்கிறார்கள்.

லாக்-அப் மரணங்கள்

கொடிய குற்றம் செய்தவர்கள், எளிதாக, பிணையில் வெளிவர இயலாத வகையில் பல்வேறு சட்டப்பிரிவுகளில் கைது செய்ய வேண்டும். குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் தடுப்பு காவலில் அவர்களை வைக்க வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்ற வழிகாட்டுதலின்படி உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். வழக்குகளில் தேவையற்ற காலதாமதம் கூடாது. குறிப்பிட்ட காலத்திற்குள் புலன்விசாரணை முடிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறோம்.

இப்போது நிகழ்ந்துள்ள லாக்-அப் மரணங்களில் எவ்வளவு துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை உறுப்பினர்கள் நன்றாக அறிவீர்கள். லாக்-அப் குற்றங்கள் இனி நடக்காமல் இருப்பதற்கான உறுதியான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தி.மு.க. ஆட்சியில் குற்றங்கள் குறைவு

தி.மு.க. ஆட்சியில் குற்றங்கள் குறைந்துள்ளன என்பதற்கு இன்னொரு முக்கிய ஆதாரமாக ஒன்றைச் சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன். அ.தி.மு.க. ஆட்சியின் கடைசி ஓராண்டில் 12 லட்சத்து 74 ஆயிரத்து 36 முதல் தகவல் அறிக்கைகள் (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டன. ஆனால் தி.மு.க. ஆட்சியில் அது பெருமளவு குறைந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 653 முதல் தகவல் அறிக்கைகள் மட்டுமே பதிவாகியிருக்கின்றன என்றால், இந்த ஆட்சியில் குற்றங்கள் குறைந்திருக்கிறது அல்லது முன்கூட்டியே தடுக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.

மாநிலத்தில் போக்சோ சட்டத்தின்கீழ் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் இவ்வாண்டு மார்ச் மாதம் வரை 4,496 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றுள் 3,441 வழக்குகளில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அச்சமின்றி புகார்

தி.மு.க. ஆட்சி பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில், பாதிக்கப்பட்ட பெண்கள், மாணவிகள் அச்சமின்றி புகார்களை அளித்து வருகிறார்கள்.

குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்களைப் பொறுத்தமட்டில், போக்சோ சட்டத்தின்கீழ் 4,496 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பதிவு செய்வது முக்கியமல்ல; குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதுதான் மிக முக்கியம். அந்த வகையில் பார்த்தால், பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், அதிகமான எண்ணிக்கையில், அதாவது, 3,441 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இன்றைக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்துவிட்டது.

போதைப்பொருட்கள் விற்பனை

கடந்த 2021-ம் ஆண்டு மே முதல் 2022-ம் ஆண்டு மார்ச் வரை கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக 7,931 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10,837 நபர்கள் கைது செய்யப்பட்டதோடு, அவர்களுள் 648 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து ரூ.31 கோடியே 76 லட்சத்து 89 ஆயிரத்து 140 மதிப்புள்ள 43 ஆயிரத்து 228 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதேபோன்று, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக 35 ஆயிரத்து 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 36 ஆயிரத்து 293 நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களுள் 720 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.66 கோடியே 67 லட்சத்து 56 ஆயிரத்து 249 மதிப்புள்ள 3 லட்சத்து 84 ஆயிரத்து 972 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

கஞ்சா விற்பனை செய்வோரின் சொத்துகளை பறிமுதல் செய்யவும் நான் உத்தரவிட்டேன். இந்த அரசு குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்க இன்னும் கடுமையான நடவடிக்கைகளை வரும் நாட்களில் எடுக்கும்.

இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்

எவ்வித அரசியல் குறுக்கீடுகளும் இல்லாமல் காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாடு நிலைநாட்டப்பட்டுள்ளது. எத்தனை சக்திகள் முயன்றாலும் சாதி, மத மோதல் இன்றி - சமூக நல்லிணக்கத் தோட்டமாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டு இருக்கிறது.

மத மோதல்களை ஏற்படுத்துவோர் - யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இனிமேலும் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்.

தண்டனை நிச்சயம்

மத துவேஷங்களுக்கு தமிழ் மண்ணில் இடமளிக்க முடியாது. அப்படி முயலுவோர் சட்டத்தின் தண்டனையை நிச்சயம் அனுபவிக்கக்கூடிய சூழலை இந்த அரசு நிச்சயம் உருவாக்கும். வலைத்தள யுகத்தின் ஆபத்துகளை அறிந்து இந்த அரசு அவற்றை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுவும் தொடரும்.

காவலர்களின் நலனை இந்த அரசு பாதுகாக்கும். விரைவில் புதிய காவலர் ஆணையத்தின் பரிந்துரைகள் கிடைக்கும். அப்படி கிடைத்ததற்கு பிறகு, அதன் மூலம் காவல்துறையினருக்கு பல நன்மைகளும் கிடைக்கும்.

வழக்குகள் வாபஸ்

வரும் காலங்களில் பாஸ்போர்ட் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை கட்டாயம் ஏற்படுத்தப்படும். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

அதுபோலவே கல்பாக்கம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்டு இருக்கக்கூடிய வழக்குகளை திரும்ப பெறக்கூடிய சூழ்நிலையை அரசு தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை பெற்று இக்கோரிக்கை நிச்சயமாக பரிசீலிக்கப்படும்.

புதிதாக 3 ஆயிரம் காவலர்கள் தேர்வு

விரைவில் 3 ஆயிரம் புதிய காவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். ஆபாச நடனங்களைத் தடுக்க ஐகோர்ட்டு சில வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்திருக்கிறது. அதைத்தான் அரசு கடைப்பிடித்து வருகிறதே தவிர கரகாட்ட நிகழ்ச்சிகள், கச்சேரிகள், சினிமா மெல்லிசை பாடல்களை பாடுவதற்கு காவல்துறை எந்த தடையும் விதிக்கவில்லை.

“காவல்துறை நியமனங்களுக்கான தேர்வுகளை பொறுத்தவரைக்கும் பெண்களுக்கான இடஒதுக்கீடு நிச்சயமாக உறுதி செய்யப்படும்.

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வளர்த்து விடப்பட்ட போதைப்பொருள் கலாசாரத்திற்கு நிச்சயமாக நாங்கள் முற்றுப்புள்ளி வைப்போம்.

மக்கள் அரசாக தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. தேர்தலுக்கு முன்பு இருந்ததைவிட, மக்கள் ஆதரவை அதிகம் பெற்ற அரசாக வளர்ந்தும் வருகிறது. ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி என்பது தேர்தல் களத்தில்தான். சட்டமன்றத்துக்குள் மக்களுக்கான நன்மையைப் பற்றி நாம் சிந்திக்கும்போது நாம் அனைவரும் ஒரே கட்சிதான். அதுதான் மக்கள் கட்சி. மக்களைக் காக்க, மக்களாட்சி மாண்பைக் காக்க மக்கள் இட்ட கட்டளையை மனதில் ஏந்தி எந்நாளும் உழைப்போம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Next Story