ஏற்றுமதி கூட்டமைப்பில் 5 ஆயிரம் பேர் தமிழர்கள் என்பதில் பெருமை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ஏற்றுமதி கூட்டமைப்பில் 5 ஆயிரம் பேர் தமிழர்கள் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் விருது வழங்கும் விழா சென்னை, டிடிகே சாலையில் நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விருந்துகளை வழங்கி கெளரவித்தார்.
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
இந்தியாவில் ஏற்றுமதியில் 3-வது பெரிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இது ஆண்டுதோறும் அதிகமாக வேண்டும். இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே என் லட்சியம். இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பில் உள்ள 35 ஆயிரம் ஏற்றுமதியாளர்களில், 5 ஆயிரம் பேர் தமிழர்கள் என்பதில் பெருமை கொள்கிறேன்.
ஏற்றுமதியை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் 24 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என விண்ணப்பித்துள்ளோம். 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி என்பதே இலக்கு.
தென் மண்டலத்தில் ஏற்றுமதியில் சிறந்து விளங்குவது தமிழ்நாடு என்பதில் பெருமை அடைகிறேன். ஏற்றுமதியில் தமிழ்நாடு இன்னும் பன்மடங்கு உயர முடியும். ஒரு மாவட்டத்திற்கு ஒரு பொருள் என்ற ஒன்றிய அரசின் திட்டத்தை செயல்படுத்த ஏற்றுமதியாளர்கள் முன்வர வேண்டும். தனது துறையை கண்ணும் கருத்துமாக அமைச்சர் தங்கம் தென்னரசு கவனித்துக் கொள்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story