சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை
காரைக்காலில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காரைக்காலில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனியர் போலீஸ் சூப்பிரண்டு
காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டாக பதவி வகித்த நாராசைதன்யா புதுச்சேரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதுச்சேரி சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். அதன்படி அவர் நேற்று பதவி பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காரைக்கால் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு, சிறுமிகள் பலாத்காரம், தற்கொலை வழக்குகள் அதிகரித்து வருகின்றன. அதேபோல் கஞ்சா புகைக்கும் பழக்கம் இளைஞரிடம் அதிகரித்து வருகிறது. இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
குண்டர் சட்டம் பாயும்
காரைக்காலில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். காரைக்கால் கடலோர பாதுகாப்பு, எல்லைகள் பாதுகாப்பு, ரோந்துப்பணிகளில் காரைக்கால் மாவட்ட போலீசார் தீவிரமாக ஈடுபடுவார்கள்.
சைபர் கிரைம் புதுச்சேரியில் செயல்பட்டு வருகிறது. அவர்களுடன் காரைக்கால் போலீசார் இணைந்து, இணையவழி குற்றங்களை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கையிலும் ஈடுபடுவார்கள். பொதுமக்களின் நண்பனாக போலீசார் இருப்பார்கள். இருப்பினும் போலீசாருக்கு உரிய ஒத்துழைப்பை பொதுமக்கள் வழங்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story