கெங்கராம்பாளையத்தில் சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு


கெங்கராம்பாளையத்தில் சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு
x
தினத்தந்தி 11 May 2022 3:45 PM GMT (Updated: 2022-05-11T21:15:58+05:30)

விழுப்புரம்-புதுச்சேரி 4 வழிச்சாலையில் கெங்கராம்பாளையத்தில் சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.

விழுப்புரம்-புதுச்சேரி 4 வழிச்சாலையில் கெங்கராம்பாளையத்தில் சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.
4 வழிச்சாலை பணி
விழுப்புரம்-புதுச்சேரி இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. இதற்காக சாலையோரத்தில் உள்ள வீடுகள், கடைகள், மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. 4 வழிச்சாலை பணிகள் நடந்து வரும் நிலையில் கெங்கராம்பாளையத்தில் சுங்கச்சாவடி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருபுவனை, திருவண்டார்கோவில் மதகடிப்பட்டு, கெங்கராம்பாளையம் ஆகிய பகுதிகளை கெங்கராம்பாளையம் இணைப்பதாக உள்ளது. இந்த வழியாக தான் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் செல்ல வேண்டி உள்ளது. சுங்கச்சாவடி அமையும்போது இந்த பகுதியை சேர்ந்தவர்கள் சுங்க கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படும். இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு
எனவே கெங்கராம்பாளையத்தில் சுங்கச்சாவடி அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த விவசாய சங்கத்தினர், வியாபாரிகள் திரண்டு வந்து மதகடிப்பட்டு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே மதகடிப்பட்டு, திருபுவனை, திருவண்டார்கோவில் பகுதியில் நீர்நிலைகள் மற்றும் பனைமரங்களை அழித்து சாலை அமைக்க பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவை மீறி 30-க்கும் மேற்பட்ட பனைமரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

Next Story