மரக்காணம் வாலிபர் கொலையில் 3 ரவுடிகள் உள்பட 9 பேர் கைது


மரக்காணம் வாலிபர் கொலையில் 3 ரவுடிகள் உள்பட 9 பேர் கைது
x
தினத்தந்தி 11 May 2022 5:20 PM GMT (Updated: 11 May 2022 5:22 PM GMT)

ரூ.50 லட்சம் கடனுக்காக மரக்காணம் வாலிபரை கொலை செய்த 3 ரவுடிகள் உள்பட 9 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

ரூ.50 லட்சம் கடனுக்காக மரக்காணம் வாலிபரை கொலை செய்த 3 ரவுடிகள் உள்பட 9 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
வாலிபர் கொலை
புதுவையை அடுத்த தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கூனிமேட்டை சேர்ந்தவர் ஷேக் சுல்தான் (வயது 28). இவர் நண்பர்களுடன் சேர்ந்து டீக்கடை நடத்தி வந்தார். மேலும் ஆன்லைன் வர்த்தகமும் செய்து வந்தததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதுவை தட்டாஞ்சாவடி நெல்மண்டி பகுதியில் நேற்று  ஷேக் சுல்தான் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். 
கடன் பிரச்சினை
விசாரணையில், ஷேக் சுல்தான் கடன் பிரச்சினை காரணமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவரது செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, கொலையாளிகள் குறித்து போலீசாருக்கு துப்பு துலங்கியது.
புதுச்சேரி நெல்லித்தோப்பு அருள்பாடையாச்சி வீதியை சேர்ந்த சிவசங்கர் என்கிற சிவா (38), அரியாங்குப்பம் கோட்டைமேடு எம்.ஜி.ஆர். நகர் பிரபாகரன் (28), முதலியார்பேட்டை சந்திரமோகன் (34), குருமாம்பேட் பன்னீர்செல்வம் என்கிற ராஜேஷ் (35), நெல்லித்தோப்பு ஜாகீர் உசேன் (38), கஸ்டன் (37), ஆல்பர்ட் சகாயராஜ் (37), பெரிய கோட்டக்குப்பம் சரத்ராஜ் (26), சாரம் சக்திநகர் சுரேஷ் (36) ஆகியோருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. 
9 பேர் கைது
இதையடுத்து அவர்கள் 9 பேரையும் போலீசார் தேடி வந்தனர். அவர்கள் வேல்ராம்பட்டு ஏரிக்கரையில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று அவர்கள் 9 பேரையும் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு ஆட்டோ, 3 மோட்டார் சைக்கிள்கள், 4 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட பன்னீர்செல்வம் மீது 8 வழக்குகளும், சரத்ராஜ் மீது 17 வழக்குகளும், கஸ்டன் மீது 5 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் 3 பேரும் பிரபல ரவுடிகள் ஆவார்கள்.
ரூ.50 லட்சம் கடன்
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது:-
கைதானவர்களும், கொலை செய்யப்பட்ட ஷேக் சுல்தானும் நண்பர்கள். ஷேக் சுல்தான் ஆன்லைன் வர்த்தகத்திற்காக அவரது நண்பர் சிவசங்கரிடம் ரூ.38 லட்சம் உள்பட சிலரிடம் மொத்தம் ரூ.50 லட்சம் வரை கடன் பெற்றதாக தெரிகிறது. 
ஆனால் ஆன்லைன் வர்த்தகத்தில் எதிர்பார்த்த அளவில் வருமானம் கிடைக்காததால் ஷேக் சுல்தான் நஷ்டம் அடைந்தார். எனவே அவர் கடன் தொகையை திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார். இதுபற்றி பலமுறை கேட்டும், ஷேக் சுல்தான் சரியாக பதில் அளிக்காமல் இருந்துள்ளார்.
அடித்துக்கொலை
இந்த நிலையில் நண்பர்கள், ஷேக் சுல்தானை புதுவை நெல்லித்தோப்புக்கு சம்பவத்தன்று அழைத்து வந்து பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சிவசங்கர் உள்பட 9 பேரும் சேர்ந்து அங்கு கிடந்த இரும்பு கம்பி, உருட்டுக்கட்டைகளால் சரமாரியமாக  ஷேக் சுல்தானை தாக்கியுள்ளனர். இதில் அவர் பரிதாபமாக இறந்துபோனார். 
இதையடுத்து அவர்கள், ஷேக் சுல்தான் உடலை அங்கிருந்து ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வீசிவிட்டு தப்பிச்சென்றனர்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
போலீசாருக்கு பாராட்டு
கைது செய்யப்பட்ட 9 பேரும் புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு கொலையாளிகளை ஒரே நாளில் கைது செய்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்களை போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம் பாராட்டினார்.

Next Story