சாமி ஊர்வலம் ஊருக்குள் வரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்


சாமி ஊர்வலம் ஊருக்குள் வரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 May 2022 10:07 PM IST (Updated: 17 May 2022 10:07 PM IST)
t-max-icont-min-icon

திருக்கனூர் அருகே சாமி ஊர்வலம் ஊருக்குள் வரக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

திருக்கனூர் அருகே சாமி ஊர்வலம் ஊருக்குள் வரக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
சாமி ஊர்வலம்
திருக்கனூர் அருகே கொ.மணவெளி கிராமத்தில் ஶ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதையொட்டி இரவு அம்மன் வீதிஉலா காட்சி நடைபெறுவது வழக்கம். 
ஆண்டுதோறும் அங்குள்ள புதுநகர் பகுதியின் வீதிகள் வழியாக சாமி ஊர்வலம் செல்வதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு கோவில் நிர்வாகத்தினர் சாமி ஊர்வலத்தை மாட வீதியில் மட்டுமே நடத்த முடிவு செய்தனர். இதற்கு புதுநகர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் பகுதிக்கு வழக்கம்போல் சாமி ஊர்வலம் வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் புதுநகர் மக்கள் புகார் தெரிவித்தனர். திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று காலை புதுநகர் பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் பகுதிக்கு சாமி ஊர்வலம் வரக்கோரி அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த திருக்கனூர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தடியடி-பரபரப்பு
இருந்தபோதிலும் அவர்கள் மறியலை கைவிடவில்லை. சாமி ஊர்வலம் எங்கள் பகுதிக்கு வந்தால் தான் மறியலை கைவிடுவோம் என்பதில் திட்டவட்டமாக இருந்தனர். நிலைமை கட்டுக்குள் அடங்காமல் போகவே போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
மேலும் மறியலில் ஈடுபட்ட ஒரு சிலரை விசாரணைக்காக ஜீப்பில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவம் நடக்காமல் தடுக்க போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story