எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலையும் முறியடிக்க நமது வீரர்கள் தயாராக இருக்க வேண்டும்- துணை ஜனாதிபதி


எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலையும் முறியடிக்க நமது வீரர்கள் தயாராக இருக்க வேண்டும்- துணை ஜனாதிபதி
x
தினத்தந்தி 18 May 2022 12:19 AM IST (Updated: 18 May 2022 12:19 AM IST)
t-max-icont-min-icon

“எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலையும் முறியடிக்க நமது வீரர்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரி நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.

ராணுவ பயிற்சி கல்லூரியில் கலந்துரையாடல்

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு முன்தினம் கோவை வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 7.15 மணிக்கு சாலை மார்க்கமாக குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி பள்ளிக்கு சென்றார். பின்னர் வெலிங்டன் ராணுவ பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள நினைவு சின்னங்கள், முன்னாள் ராணுவ அதிகாரிகளின் புகைப்படங்களை பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனும் கலந்துகொண்டார்.

தொடர்ந்து ராணுவ அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

பாதுகாப்பு அச்சுறுத்தல்

இன்று, இந்தியா மிகவும் சிக்கலான மற்றும் கணிக்க முடியாத புவி-அரசியல் சூழலில் பல பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கிறது என்பது உங்களுக்கு தெரியும். வெளியிலும் உள்ளேயும் இருந்து சமச்சீர் மற்றும் சமச்சீரற்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறோம். எனவே, எந்தவொரு சவாலையும் சமாளிக்கவும், எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலையும் உறுதியாக முறியடிக்கவும் நமது படைகள் முழுமையாக தயாராக இருக்க வேண்டும்.

நமது அணுகுமுறை எப்போதும் அமைதியான மற்றும் பயங்கரவாதமற்ற சூழலை உருவாக்கவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடும் எந்தவொரு முயற்சியும் நமது பாதுகாப்பு படைகளால் கடுமையாக எதிர்கொள்ளப்படும் என்று தேசம் நம்புகிறது.

புதிய போர்முறை

போார்கள் இன்றைய காலத்தில் போர்க்களங்களில் மட்டும் நடத்தப்படுவதில்லை. மாறாக தகவல் மற்றும் இணைய போர், டிரோன்கள் மற்றும் ரோபோட்டிக்ஸ் மற்றும் விண்வெளி அடிப்படையிலான போர் முறைகள் அதிகரித்து வருகின்றன. எனவே, நமது பாதுகாப்பு துறை புதிய மற்றும் வளர்ந்து வரும் போர் முறைகளில் கவனம் செலுத்தி தங்களது திறன்களை மேம்படுத்த வேண்டும். இந்திய ராணுவத்தை 'எதிர்கால சக்தியாக' வளர்ப்பதே நமது எண்ணமாகவும் திட்டமாகவும் இருக்க வேண்டும்.

நாம் எதிர்காலத்தில் அடியெடுத்து வைக்கும் போது, தனித்து செயல்படும் முறையிலிருந்து ஒருங்கிணைந்து செயல்படும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். பாதுகாப்பு உற்பத்தியில் உள்நாட்டுமயமாக்கல் மற்றும் ‘ஆத்மநிர்பர்தா’ ஆகியவற்றை ஊக்குவிக்க அரசாங்கம் பல கொள்கை முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்களை எடுத்துள்ளது பாராட்டத்தக்கது.

பெண்களுக்கு சமவாய்ப்பு

விமான படையின் போர் விமானங்கள், கடற்படை கப்பல்கள், ராணுவ காவல் படை மற்றும் வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் பெண் அதிகாரிகள் பணியமர்த்தப்படுவதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இவை வரவேற்கத்தக்கவை. ஒவ்வொரு துறையிலும் பெண்களுக்கு சம வாய்ப்புகளை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.

நமது ஆயுத படைகளின் எதிர்கால தலைமை மற்றும் வீரர்களை வடிவமைப்பதில் இங்குள்ள டிபன்ஸ் சர்வீசஸ் கல்லூரி, மெட்ராஸ் ரெஜிமென்ட் மற்றும் அதன் ஆசிரியர்களின் முயற்சிகளும் சிறப்பாக இருக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

துணை ஜனாதிபதியுடன் அவருடைய மனைவி உஷாவும் வருகை தந்து இருந்தார்.

52 ஆண்டுகளுக்கு பின்னர்...

52 ஆண்டுகளுக்கு பின்னர் துணை ஜனாதிபதி ஒருவர், வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். கடைசியாக கடந்த 1970-ம் ஆண்டு துணை ஜனாதிபதி கோபால் சுவரூப் பதக் இங்குவந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று (புதன்கிழமை) ஊட்டி லாரன்ஸ் பள்ளியில் நடைபெறும் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வெங்கையா நாயுடு மீண்டும் ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் ஓய்வெடுக்கின்றார். பின்னர் 20-ந் தேதி வெங்கையா நாயுடு கோவை வந்து அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.


Next Story