நெல்லை கல்குவாரி விபத்தில் 6-வது நபரை தேடும் பணி தீவிரம்


நெல்லை கல்குவாரி விபத்தில் 6-வது நபரை தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 18 May 2022 3:57 AM IST (Updated: 18 May 2022 3:57 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை கல்குவாரி விபத்தில் 6-வது நபரை தேடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

நெல்லை,

நெல்லை முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில் கடந்த 14-ந் தேதி ராட்சத பாறைகள் சரிந்து விழுந்தது.

இந்த விபத்தில் அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த பொக்லைன் டிரைவர்களான விட்டிலாபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது 31), நாட்டார்குளம் பகுதியைச் சேர்ந்த விஜய் (25), இளையநயினார்குளத்தை சேர்ந்த செல்வம் (25), லாரி டிரைவர்களான ஊருடையான்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (42), காக்கைகுளத்தை சேர்ந்த செல்வகுமார் (30), பொக்லைன் கிளீனர் ஆயன்குளத்தை சேர்ந்த மற்றொரு முருகன் (25) ஆகிய 6 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். 

விட்டிலாபுரம் முருகன், விஜய், செல்வம், ஆயன்குளம் முருகன் ஆகிய 4 பேரையும் தீயணைப்பு படையினரும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் மீட்டனர். இதில் செல்வம், ஆயன்குளம் முருகன் ஆகியோர் இறந்துவிட்டனர். மேலும் இடிபாடுகளில் சிக்கிய மற்ற 2 பேரையும் மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று 4-வது நாளாக மீட்பு பணி தொடர்ந்தது. காலையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கயிறு கட்டி கல்குவாரி பகுதியில் இறங்கினார்கள். இடிபாடுகளில் யாராவது உள்ளனரா? என்று தேடி பார்த்தனர்.

அப்போது, இடிபாடுகளில் சிக்கிய இன்ெனாரு நபர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. உடல் அசைவின்றி இருப்பதால் அவர் பாறைகள் நசுங்கி பலியாகி இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவரின் உடல் கற்குவியலுக்குள் சிக்கி இருப்பதால் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இரும்பு ரோப் கொண்டு வரப்பட்டது. முதற்கட்டமாக இரும்பு ரோப்பை பாறைகளில் கட்டி ராட்சத கிரேன் மூலம் நகர்த்தி, அவரது உடலை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். இந்த பணி இரவு வரை நீடித்தது.

மேலும் 6-வது நபரை தேடும் பணியிலும் பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அவர் எந்த பகுதியில் சிக்கி இருப்பார் என்பது குறித்து ஆய்வு செய்தும் வருகின்றனர். ேமலும் போலீஸ் மோப்ப நாய் ரெக்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால் இரவு நேரம் என்பதால் மோப்ப நாயை போலீசார் திரும்ப அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையே, மீட்பு பணிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு நேற்று மாலை நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முருகன் மற்றும் விஜய் ஆகியோர் அளித்த தகவலின் பேரில், உள்ளே சிக்கி இருக்கும் நபர்கள் இருக்கும் இடங்களை கண்டறிந்து மீட்டு வருகிறோம். அதன்படி 5-வது நபர் இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

அவரது உடல் பெரிய பாறைகளுக்கு அடியில் சிக்கி இருப்பதால், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து பிரத்தியேக இரும்பு ரோப் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி நடைபெற்று வருகிறது. 6-வது நபரை தேடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

Next Story