புதுச்சேரியை குப்பை இல்லாத மாநிலமாக மாற்ற முயற்சி


புதுச்சேரியை குப்பை இல்லாத மாநிலமாக மாற்ற முயற்சி
x
தினத்தந்தி 18 May 2022 2:58 PM GMT (Updated: 18 May 2022 2:58 PM GMT)

விஞ்ஞானப்பூர்வமான நடவடிக்கைகள் மூலம் புதுச்சேரியை குப்பை இல்லாத மாநிலமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

புதுச்சேரி
விஞ்ஞானப்பூர்வமான நடவடிக்கைகள் மூலம் புதுச்சேரியை குப்பை இல்லாத மாநிலமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
புத்தாக்க மையம்
மத்திய கலாசார அமைச்சகத்தின் தேசிய அறிவியல் அருங்காட்சியக மன்றம், புதுவை அரசின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாமன்றம் ஆகியவை சார்பில் லாஸ்பேட்டையில் உள்ள அப்துல்கலாம் கோளரங்கத்தில் புத்தாக்க மையம் ரூ.1½ கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. 
இதன் தொடக்க விழா இன்று நடந்தது. விழாவுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு புத்தாக்க மையத்தை திறந்து வைத்தார்.
அறிவியல் கண்காட்சி
தொடர்ந்து கவர்னரும், முதல்-அமைச்சரும் அங்கு நடந்த அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டு மாணவர்களிடம் விளக்கங்களை கேட்டறிந்தனர்.
நிகழ்ச்சியில் செல்வகணபதி எம்.பி., அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளர் ஸ்மிதா, பெங்களூரு விஸ்வேஸ்வரா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின் இயக்குனர் சாதனா, புதுவை சுற்றுச்சூழல் துறையின் முதுநிலை பொறியாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புரிந்துணர்வு ஒப்பந்தம்
உலக அருங்காட்சியக தினத்தில் குழந்தைகளுக்கு தேவையான வருங்கால விஞ்ஞானம், ஆராய்ச்சிக்கு இங்கே வழிவகை செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனத்தோடு அப்துல்கலாம் அறிவியல் மையம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது. இது வருங்காலத்தில் குழந்தைகளின் அறிவியல் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு மிக உதவியாக இருக்கும்.
இதன் மூலம் எந்த பள்ளியில் படிக்கும் குழந்தையும் எந்தவிதமான ஆராய்ச்சியும் செய்யலாம். இது புதுவை அரசும் மத்திய கலாசார அமைச்சகமும் இணைந்து செய்யும் ஒரு புதிய முயற்சி. 
மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் இளைஞர்களுக்கு எவ்வளவு சிறந்த முறையில் வழிகாட்ட முடியும் என்பதற்கும், மக்கள் எவ்வளவு பலம் பெறுவார்கள் என்பதற்கும் இந்த கண்காட்சியும், ஆராய்ச்சி மையமும் உதாரணம்.
குப்பை இல்லாத மாநிலமாக...
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறு சுழற்சிக்கு சாத்தியமுள்ள பூமியாக இது இருக்கவேண்டும் என்று கூறினார். குப்பைகளை அகற்ற ஒரு ரோபோ கண்டுபிடித்திருக்கிறார்கள். புதுவையை குப்பை இல்லாத மாநிலமாக மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதல்-அமைச்சருடன் கலந்து ஆலோசித்து திட்டங்களை வகுத்து குப்பை இல்லாத புதுச்சேரியாக மாற்றும் வகையில் விஞ்ஞானப்பூர்வமாக பல நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஆலோசனை இங்கு கிடைத்திருக்கிறது.
இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Next Story