வேளாண் விற்பனை கூடத்துக்கு மணிலா வரத்து அதிகரிப்பு


வேளாண் விற்பனை கூடத்துக்கு மணிலா வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 18 May 2022 3:03 PM GMT (Updated: 2022-05-18T20:33:08+05:30)

புதுவை வேளாண் விற்பனைக்கூடத்துக்கு மணிலா வரத்து அதிகரித்துள்ளது. அரசே கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கு உரிய விலையும் கிடைக்கிறது.

புதுச்சேரி
புதுவை வேளாண் விற்பனைக்கூடத்துக்கு மணிலா வரத்து அதிகரித்துள்ளது. அரசே கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கு உரிய விலையும் கிடைக்கிறது.
மணிலா
புதுவை தட்டாஞ்சாவடியில் வேளாண் விற்பனைக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு புதுவை மற்றும் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருட்களான நெல், மணிலா, பயிறு வகைகள் உள்ளிட்டவற்றை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
தற்போது மணிலா அறுவடைக்காலம் என்பதால் அதிக அளவில் வரத்து வருகிறது. மற்ற நாட்களில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 200 மூட்டைகள் வரை விற்பனைக்கூடத்துக்கு வரத்து இருக்கும். ஆனால் தற்போது நாள் ஒன்றுக்கு 600 மூட்டைகள் வரை மணிலா வருகிறது.
ரூ.7,300-க்கு விற்பனை
மணிலா மூட்டை (40 கிலோ) ரூ.2 ஆயிரத்து 700-க்கு விற்பனை ஆகிறது. காய்ந்த மணிலா பயறு (80 கிலோ) மூட்டை ரூ.7 ஆயிரத்து 300-க்கு விலைபோகிறது.
இதுதவிர உளுந்து 150 மூட்டை வரை வருகிறது. 100 கிலோ எடையுள்ள மூட்டை ரூ.6 ஆயிரத்து 780 வரை விற்பனையானது. பச்சைப்பயறு ரூ.6 ஆயிரத்து 650 வரை விற்பனையாகிறது.
இது தொடர்பாக விற்பனைக்குழுவின் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:-
அரசே கொள்முதல்
தற்போது அறுவடைக்காலம் என்பதால் மணிலா வரத்து அதிகரித்துள்ளது. விவசாயிகளுக்கு அவர்களுடைய விளைபொருட்களுக்கான பணம் உடனடியாக பட்டுவாடா செய்யப்படுகிறது. அரசு சார்பில் நவீன செக்கு எண்ணெய் ஆலை திறக்கப்பட்டுள்ளதால் அங்கு அரைப்பதற்கு அரசே மணிலாவை கொள்முதல் செய்கிறது. இதனால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது. அங்கு சென்று பொதுமக்களுக்கும் தரமான எண்ணெய் வாங்கி செல்லலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story