கோடை விடுமுறை முடிந்து 2,056 பள்ளிகள் திறப்பு


கோடை விடுமுறை முடிந்து 2,056 பள்ளிகள் திறப்பு
x
தினத்தந்தி 14 Jun 2023 7:42 PM GMT (Updated: 15 Jun 2023 11:46 AM GMT)

கோடை விடுமுறை முடிந்து 2,056 பள்ளிகள் திறக்கப்பட்டன

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து 2,056 பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர். முதல் நாளிலேயே பாடப்புத்தகங்களும் வழங்கப்பட்டன.

கோடை விடுமுறை

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கோடைவெயில் வாட்டி வதைத்ததாலும், பல இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வந்ததால், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து பள்ளிகள் திறப்பு ஜூன் 7-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் வெயிலின் தாக்கம் குறையாததால் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் ஜூன் 14-ந்தேதியும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 12-ந்தேதியும் பள்ளிகளில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தொடக்கப்பள்ளிகள் திறப்பு

அதன்படி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் கடந்த 12-ந்தேதி முதல் திறக்கப்பட்டு செயல்படத்தொடங்கின. தஞ்சை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளான உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் 462 பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நேற்று முதல் செயல்படத்தொடங்கின. அதன்படி தொடக்கப்பள்ளிகள் 1,310-ம், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான நடுநிலைப்பள்ளிகள் 284-ம் என 1,594 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.

இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் எல்.கே.ஜி.முதல் 12-ம் வகுப்பு வரையிலான 2,056 பள்ளிகளும் நேற்று முதல் திறக்கப்பட்டு செயல்படத்தொடங்கின. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளான நேற்று மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டு உள்ளிட்ட உபகரணங்களும் வழங்கப்பட்டன.

இனிப்புகள் வழங்கினர்

1½ மாத விடுமுறைக்குப்பின்னர் நேற்று பள்ளிக்கு சிறுவர், சிறுமிகள் சென்றனர். சில சிறுவர்கள் உற்சாகத்துடன் தங்களது பெற்றோர்களுடன் பள்ளிக்கு சென்றனர். சிலர் அழுது கொண்டே சென்றதையும் பார்க்க முடிந்தது. பள்ளிக்கு வந்த சிறுவர், சிறுமிகளுக்கு ஆசிரியர்கள் இனிப்புகளும் வழங்கினர்.


Next Story