அனைத்து கட்சி கவுன்சிலர்கள் 21 பேர் சாலையை சீரமைத்தனர்
ஆம்பூர் நகராட்சியில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், அனைத்துகட்சியை சேர்ந்த 21 கவுன்சிலர்கள் இணைந்து சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் காலி குடங்களுடன் தரையில் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை சீரமைப்பு
ஆம்பூர் நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. தி.மு.க.வை சேர்ந்தவர் நகர மன்ற தலைவராக உள்ளார். நகராட்சி 21-வது வார்டு நதிசீலாபுரம் சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தனர். இதுவரையில் நகராட்சி நிர்வாகம் சாலையை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
நகராட்சி நிர்வாகத்தின் மெத்தன போக்கை கண்டித்து நேற்று தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து கட்சியை சேர்ந்த 21 கவுன்சிலர்கள் சேர்ந்து சேதம் அடைந்துள்ள சாலையில் மண் கொட்டி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
காலி குடங்களுடன் போராட்டம்
மேலும் அப்பகுதியில் குடிநீர் சரிவர வழங்கவில்லை எனக் கூறி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் கவுன்சிலர்கள் காலி குடத்துடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கவுன்சிலர்கள் சாலையை சீரமைக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் ஆம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.