21 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்; கவர்னரை நேரில் சந்தித்து முதல்-அமைச்சர் வலியுறுத்தல்


21 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்; கவர்னரை நேரில் சந்தித்து முதல்-அமைச்சர் வலியுறுத்தல்
x

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப் பட்டு அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையிலுள்ள சட்ட மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சில மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.

குறிப்பாக தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட மசோதா உள்ளிட்டவை கவர்னரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன.

மு.க.ஸ்டாலின் சந்திப்பு

மசோதாக்கள், மாநில நலன் தொடர்பானது என்றால் அதற்கு கவர்னரும், மத்திய அரசு தொடர்புடைய மசோதா என்றால், அதை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காகவும் அனுப்பி வைக்க வேண்டும்.

அந்த வகையில் சில மசோதாக்களுக்கு கவர்னரின் ஒப்புதல் கிடைக்க காலதாமதம் ஆவதாக பேசப்பட்டு வந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

நன்றி தெரிவித்தார்

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 2-ந் தேதியன்று (நேற்று) தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேரில் சந்தித்து பேசினார். அப்போது தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையிலுள்ள சட்ட மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக, மருத்துவ மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட மசோதா வுக்கு ஒப்புதல் வழங்க கவர்னரை வலியுறுத்தினார். இந்த சந்திப்பின் தொடக்கத்தில், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்ததற்காக கவர்னருக்கு முதல்-அமைச்சர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

21 மசோதாக்கள் நிலுவை

அதோடு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (திருத்தச்) சட்டமசோதா -1983, தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமை சட்டமுன்வடிவு 2022, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டமுன்வடிவு 2022, உள்ளிட்ட 21 சட்ட மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து, அரசியல் சாசனத்தின் உணர்வையும், தமிழக மக்களின் விருப்பத்தையும் நிலைநிறுத்த வேண்டும் என்று கவர்னரை முதல்-அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கவர்னருடனான இந்தச் சந்திப்பின் போது, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, முதல்-அமைச்சரின் செயலாளர்-1 உதயச்சந்திரன், கவர்னரின் செயலாளர் ஆனந்தராவ் விஷ்ணு பட்டீல் ஆகியோர் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

25 நிமிடம் பேச்சு

தமிழக கவர்னரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை 5 மணிக்கு சந்தித்தார். இந்த சந்திப்பு மாலை 5.25 மணிவரை நீடித்தது. இந்த சந்திப்பின் போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை கவர்னரிடம் முதல்-அமைச்சர் அளித்தார்.


Next Story