மேட்டூர் நகராட்சி கூட்டத்தில் இருந்து தலைவர் வெளியேறியதால் பரபரப்பு-பொறுப்பு அதிகாரியிடம், 21 கவுன்சிலர்கள் முறையீடு
கோரம் இல்லாத தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கவுன்சிலர்கள் கூறிய குற்றச்சாட்டால் மேட்டூர் நகராட்சி கூட்டத்தில் இருந்து தலைவர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொறுப்பு அதிகாரியிடம், 21 கவுன்சிலர்கள் புகார் மனு கொடுத்து முறையிட்டனர்
மேட்டூர்:
நகராட்சி கூட்டம்
மேட்டூர் நகரசபை கூட்டம் நேற்று காைல தொடங்கியது. கவுன்சிலர்கள் தங்களது இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர். நகராட்சி தலைவர் சந்திரா அவரது இருக்கையில் வந்து அமர்ந்தார். உடனே கவுன்சிலர்கள் பெரும்பாலானவர்கள் எழுந்து, கடந்த கூட்டத்தில் குடிநீர் அபிவிருத்தி பணி தொடர்பாக வைக்கப்பட்டு இருந்த தீர்மானத்துக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. எதிர்ப்பை தெரிவித்து இருந்தோம். அப்படி இருந்தும் கோரம் இல்லாமல் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது எப்படி என்று குற்றம்சாட்டி பேசினர்.
தலைவர் வெளியேறினார்
உடனே நகராட்சி தலைவர் சந்திரா தனது இருக்கையில் இருந்து எழுந்ததுடன், கூட்ட அரங்கை விட்டு திடீரென வெளியேறினார். இதனால் கூட்ட அரங்கில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேரமாக கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் காத்திருந்தனர். தலைவர் வரவில்லை என்றவுடன், கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) மணிமாறனிடம் முறையிட்டனர்.
பின்னர் 21 கவுன்சிலர்கள், நாங்கள் ஆதரவு தெரிவிக்காத தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தலைவரிடம் கேட்டால் பதில் அளிக்காமல் கூட்ட அரங்கை விட்டு வெளியே சென்று விட்டார். இன்றைய (அதாவது நேற்று) கூட்டத்தில் எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி மன கொடுத்தனர்.
நகராட்சி கூட்டத்தில் தலைவரே கூட்டத்தை புறக்கணிப்பு செய்வது போல் கூட்ட அரங்கை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.