காதல் திருமணம் செய்த 21 நாளில் புதுப்பெண் மர்மச்சாவு
காதல் திருமணம் செய்த புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். எனவே அவருடைய உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலாந்துறை
காதல் திருமணம் செய்த புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். எனவே அவருடைய உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 ஆண்டாக காதல்
கோவை- சிறுவாணி ரோடு மத்வராயபுரம் குறிஞ்சி நகரை சேர்ந் தவர் சஞ்செய் (வயது 20). இவர் பேரூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவருக்கும், அதே வகுப்பில் படித்து வந்த செல்வபுரத்தை சேர்ந்த ரமணி (20) என்ப வருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.
பின்னர் அது காதலாக மாறியது. அவர்கள் கடந்த 2 ஆண்டுக ளாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். அவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
எனவே அவர்க ளின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கோவிலில் திருமணம்
இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் கடந்த 8-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறினார்கள். உடனே தனது மகளை காணவில்லை என்று ரமணியின் பெற்றோர் செல்வபுரம் போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமணியை தேடி வந்தனர்.
இதற்கிடையே ரமணி-சஞ்செய் ஆகியோர் வேளாங்கண்ணி சென்று அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
உடனே அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்தில் ஆஜராகும்படி செல்வபுரம் போலீசார் தெரிவித்தனர்.
அதன்பேரில் அவர்கள் 2 பேரும் செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்கள்.
வரவேற்பு நிகழ்ச்சி
அப்போது இருவரின் பெற்றோர் மற்றும் புதுமண தம்பதியிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்களிடம் நான் காதல் கணவருடன்தான் செல்வேன் என்று ரமணி உறுதியாக கூறினார்.
அவர்களை சஞ்செயின் பெற்றோர் ஏற்றுக்கொண்ட னர். ஆனால் ரமணியின் பெற்றோர் ஏற்றுக்கொள்ள வில்லை.
எனவே காதல் தம்பதியை சஞ்செயின் பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். இதையடுத்து காதல் தம்பதி மத்வராயபுரத்துக்கு சென்று குடும்பம் நடத்தி வந்தனர்.
அவர்க ளுக்கு கடந்த 24-ந் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மனஉளைச்சல்
இதற்கிடையே ரமணியின் தந்தை, தனது மகளை தொடர்பு கொண்டு உனது பொருள் வீட்டில் இருக்கிறது, வந்து எடுத்துச் செல் என்று கூறி உள்ளார். அதற்கு நான் பிறகு வந்து எடுத்துக் கொள்கிறேன் என்று ரமணி கூறியதாக தெரிகிறது.
இதனால் அவரை தந்தை திட்டியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் மனஉளைச்சலில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் 2 பேருக்கும் திருமணம் முடிந்துவிட்டதால் தொடர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் அவர்கள் தொலை தொடர்பு கல்வி மூலம் படிக்க முடிவு செய்து நேற்று முன்தினம் விண்ணப்பங்களை வாங்க கோவை வந்தனர். பின்னர் அவர்கள் பிற்பகலில் வீடு திரும்பினார்கள்.
உயிரிழப்பு
அப்போது உடல் சோர்வாக இருப்பதாக கூறி ரமணி படுக்கை அறைக்கு சென்று ஓய்வு எடுத்தார். இரவில் சாப்பிட எழுப்புவதற் காக சஞ்செய் சென்று பார்த்த போது ரமணி மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரமணியை மீட்டு பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ரமணி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய உடல் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போராட்டம்
காதல் திருமணம் செய்து கொண்ட 21 நாளிலேயே புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்ததால் இது குறித்து கோவை தெற்கு ஆர்.டி.ஓ. பண்டரிநாதன் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் ரமணி உயிரிழந்தது குறித்து தகவல் அறிந்த அவருடைய உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர்.
அவர்கள், உயிரிழந்த ரமணியின் உடலில் காயங்கள் இருப்பதால், அவருடைய சாவில் மர்மம் இருப்பதாகவும், அது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
சந்தேக மரணம்
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறும்போது, ரமணியின் உடலில் காயங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர்தான் எதையும் உறுதியாக கூற முடியும். எனவே சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.