21 கிலோ கஞ்சா பறிமுதல்
நரிக்குடி அருகே 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக 8 பேைர கைது செய்தனர்.
காரியாபட்டி,
நரிக்குடி அருகே 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக 8 பேைர கைது செய்தனர்.
ரோந்து பணி
விருதுநகர் மாவட்டம் அ.முக்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமல் மற்றும் போலீசார் நேர்த்தியாயிருப்பு சுடுகாட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு கார் நின்று கொண்டிருப்பதை பார்த்த போலீசார் அங்கு சென்று விசாரித்தனர்.
அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த நரிக்குடி அருகே நேர்த்தியாயிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 24), பிள்ளையார்குளத்தை சேர்ந்த துரைராஜ் (21), திருப்பூரை சேர்ந்த பிரதீப் (23), சரவணன் (24) அபுபக்கர் சித்திக் (20) உள்பட 8 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
8 பேர் கைது
விசாரணையில் மனோகரன் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாகவும், அவர் தனது சொந்த ஊரான நேர்த்தியாயிருப்பு கிராமத்திற்கு ஒரு காரில் மகாசிவராத்திரிக்கு சாமி கும்பிட வந்தபோது காரில் 21 கிலோ கஞ்சாவை எடுத்து வந்து இந்த பகுதியில் விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடம் இருந்த 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் மனோகரன் உள்பட 8 பேரை அ.முக்குளம் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.