21 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டி
கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வரை 21 கிலோ மீட்டர் தூர மாரத்தான் போட்டி நடந்தது. இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மனோ தங்கராஜ், போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோர் பங்கேற்று ஓடினர்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வரை 21 கிலோ மீட்டர் தூர மாரத்தான் போட்டி நடந்தது. இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மனோ தங்கராஜ், போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோர் பங்கேற்று ஓடினர்.
விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
நீர்நிலைகளை காப்போம், குமரியில் பழையாற்றை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி நேற்று கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வரை 21 கிலோ மீட்டர் தூர விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஆகியோர் பங்கேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
அமைச்சர்கள் பங்கேற்பு
போட்டியை தொடங்கி வைத்ததோடு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மனோ தங்கராஜ் மற்றும் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, போலீஸ் சூப்பிரண்டுகள் ஹரிகிரண் பிரசாத் (கன்னியாகுமரி), சரவணன் (நெல்லை) மற்றும் அரசு அதிகாரிகள், போலீசார், பள்ளி- கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு ஓடி 21 கிலோ மீட்டர் தூரத்தையும் நிறைவு செய்தனர்.
ஓட்டமானது கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இருந்து தொடங்கி மணக்குடி, புத்தளம், தெங்கம்புதூர், பறக்கை சந்திப்பு, சவேரியார் ஆலய சந்திப்பு, மணிமேடை, அண்ணா பஸ் நிலையம் வழியாக வடசேரி அண்ணா விளையாட்டரங்கத்தில் முடிவடைந்தது.
இந்த போட்டியில் 21 கிலோ மீட்டர் தூரத்தை கர்நாடகாவைச் சேர்ந்த பரசப்பா கலிடா 1 மணி நேரம் 9 நிமிடம் 26 வினாடிகளில் கடந்து முதல் பரிசை பெற்றார். முதல் பரிசாக இவருக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.
பரிசு தொகை-சான்றிதழ்
கேரளாவைச் சேர்ந்த ஜெகநாதன் 1 மணி நேரம் 9 நிமிடம் 59 வினாடிகளில் கடந்து 2-வது பரிசை தட்டி சென்றார். இவருக்கு ரூ.15 ஆயிரம் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. கோயம்புத்தூரை சேர்ந்த வினோத் 1 மணி நேரம் 13 நிமிடம் 53 வினாடிகளில் கடந்து 3-வது பரிசை பெற்றார். இவருக்கு ரூ.10 ஆயிரம் பரிசும், சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதேபோல 21 கிலோ மீட்டர் தூர போட்டியில் பெண்களுக்கான பிரிவில் நாகர்கோவிலை சேர்ந்த சமீதா 2 மணி நேரம் 37 நிமிடம் 47 வினாடியில் கடந்து முதல் பரிசு பெற்றார். இவருக்கு பரிசு தொகையாக ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது. 2-வது பரிசை அஸ்வினி என்பவர் 2 மணி நேரம் 50 நிமிடம் 43 வினாடியில் கடந்து தட்டி சென்றார். இவருக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது. 3-வது பரிசை தீபா என்பவர் வென்றார். இவர் 3 மணி நேரம் 7 நிமிடம் 11 வினாடியில் கடந்து ரூ.10 ஆயிரம் பரிசை பெற்றார். 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான பிரிவில் ராமசாமி 1 மணி நேரம் 42 நிமிடம் 42 வினாடிகளில் கடந்து முதல் பரிசு பெற்றார். இவருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. அடுத்தபடியாக மாராப்பன் என்பவர் 1 மணி நேரம் 44 நிமிடம் 26 வினாடிகள் கடந்து வந்து 2-வது பரிசை தட்டி சென்றார். இவருக்கு ரூ.7 ஆயிரம் வழங்கப்பட்டது. டிக்ஸன் என்பவர் 1 மணி நேரம் 47 நிமிடம் 11 வினாடிகள் கடந்து மூன்றாம் பரிசை தட்டி சென்றார். இவருக்கு ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.
பேட்டி
இதற்கிடையே அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவா் கூறியதாவது:-
கன்னியாகுமரியில் நான் ஓடிய மாரத்தான் போட்டி எனக்கு 138-வது போட்டியாகும். ஏற்கனவே லண்டன், நார்வே உள்பட 12 வெளிநாடுகளில் மாரத்தான் ஓடியுள்ளேன். இந்தியாவில் இதுவரை 24 மாநிலங்களில் ஓடியுள்ளேன். என்னுடைய இலக்கு அனைத்து மாநிலங்களிலும் கால் தடத்தை பதிக்க வேண்டும்.
தொடர்ந்து மக்களின் ஆரோக்கியம், பொது சேவை, இயற்கையை காப்பது, சமூக ஒற்றுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன் வைத்து ஓட இருக்கிறேன். தற்போது பல்வேறு நாடுகளிலும் பரவி வரும் பி.எப்.-7 வகை கொரோனா தமிழகத்தில் இல்லை. தொற்று தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. எனவே மக்கள் யாரும் பயப்பட வேண்டும். முக கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை மக்கள் கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை தொடர்ந்து மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை மாரத்தான் ஒருங்கிணைப்பு செயலாளர் டாக்டர் தேவா பிரசாத் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.