ரூ.21¼ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
ரூ.21¼ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கடத்தல் தங்கம்
திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுமார் 1,370 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் வந்த ஆண் பயணி கிரைண்டர் எந்திரத்தில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ.21 லட்சத்து 27 ஆயிரத்து 672 மதிப்பிலான 348 கிராம் தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல்
இதேபோல் விமான நிலைய கழிவறையில் கேட்பாரற்று கிடந்த ரூ.2 லட்சத்து 99 ஆயிரத்து 586 மதிப்பிலான 49 கிராம் தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அதனை கழிவறையில் வீசிச்சென்றது யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தில் நேற்று மொத்தம் ரூ.24 லட்சத்து 27 ஆயிரத்து 258 மதிப்பிலான 397 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.