236 பேருக்கு ரூ.21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
236 பேருக்கு ரூ.21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
திருவாரூர் புலிவலத்தில் 236 பேருக்கு ரூ.21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.
மக்கள் நேர்காணல் முகாம்
திருவாரூர் ஒன்றியம் புலிவலம் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். முகாமில் புலிவலம், வேலங்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். அதனை தொடர்ந்து 236 பேருக்கு ரூ.21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.
இலவச பயிற்சி
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
தமிழக அரசின் நலத்திட்டங்கள் மக்களின் இருப்பிடத்திற்கே சென்று கிடைக்கின்ற வகையில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசின் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மக்கள் அறிந்து அதனை முழுயாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதற்கு இந்த முகாம் உறுதுணையாக இருக்கும்.
போட்டி தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு துறையின் சார்பில் இலவச பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து பயன் பெற வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இதில் உதவி கலெக்டர் சங்கீதா, தனித்துணை கலெக்டர் (சமூகபாதுகாப்புத்திட்டம்) கண்மணி, ஒன்றியக்குழு தலைவர் புலிவலம் தேவா, துணைத்தலைவர் தியாகராஜன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கருணாகரன், ஒன்றியக்குழு உறுப்பினர் தவுலத் இக்பால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர், புவனேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர்கள் காளிமுத்து, விஜயலட்சுமி வெங்கடேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.