உழவன் செயலி மூலம் 21 சேவைகளை அறியலாம்
உழவன் செயலியை பயன்படுத்தி 21 வகையான சேவைகளை அறியலாம் என்று விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உழவன் செயலியில் தற்போது 21 வகையான சேவைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசின் மானிய திட்டங்கள், விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருட்களை எவ்வித ஒரு தடையும் இன்றி பெற, முன்பதிவு செய்துகொள்ளும் வசதி, பயிர் காப்பீடு விவரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் உரக்கடைகளில் உள்ள உரங்களின் இருப்பு, விலை விவரங்களை அறிந்துகொள்ளலாம். இதேபோல் குறைந்த விலையில் வாடகை எந்திரங்கள் பெற அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் நிறுவனங்களின் முழு விவரங்கள் இடம்பெற்றுள்ளது.
விவசாயிகள் பயன்பெறலாம்
மேலும் விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கான உண்மையான சந்தை விலையை அறிந்துகொள்ளும் வசதியும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சந்தைகளின் விலை விவரமும் அறியலாம். இதனால் இடைத்தரகர்களிடம் ஏமாறாமல் இருக்க முடியும். மழைப்பொழிவு, அணைகளின் நீர்மட்டம், வேளாண் செய்திகள், மானியங்கள், உழவர் அலுவலர் தொடர்பு திட்டம், பூச்சிநோய் கண்காணிப்பு மற்றும் பரிந்துரை, அட்மா பயிற்சி மற்றும் செயல்விளக்கம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் என அரசால் வழங்கப்படும் அனைத்து பயன்களையும் ஒரே குடையின் கீழ் பெற உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள எளிய உழவன் செயலியை விவசாயிகள் அனைவரும் தங்களுடைய ஆன்ட்ராய்டு செல்போனில் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.