முதுமலையில் 21 காட்டுப்பன்றிகள் இறந்ததால் பரபரப்பு


முதுமலையில் 21 காட்டுப்பன்றிகள் இறந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Jan 2023 12:15 AM IST (Updated: 4 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பந்திப்பூர் வனப்பகுதியில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலுக்கு 22 பன்றிகள் இறந்தன. இதைத்தொடர்ந்து முதுமலையிலும் 21 காட்டுப்பன்றிகள் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இங்கும் அந்த வகை காய்ச்சல் பரவியதா என அறிய, உத்தரபிரதேசத்தில் உள்ள ஆய்வகத்துக்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி

கூடலூர்,

பந்திப்பூர் வனப்பகுதியில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலுக்கு 22 பன்றிகள் இறந்தன. இதைத்தொடர்ந்து முதுமலையிலும் 21 காட்டுப்பன்றிகள் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இங்கும் அந்த வகை காய்ச்சல் பரவியதா என அறிய, உத்தரபிரதேசத்தில் உள்ள ஆய்வகத்துக்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், கரடிகள், செந்நாய்கள், சிறுத்தைகள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

முதுமலை அருகே கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகமும், கேரள மாநிலம் முத்தங்கா சரணாலயமும் உள்ளது. இதனால் வனவிலங்குகள் 3 மாநில வனப்பகுதிகளுக்குள் இடம்பெயர்ந்து சென்று வருவது வழக்கம்.

இதற்கிடைேய கடந்த 1 மாதமாக பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் காட்டுப்பன்றிகள் தொடர்ந்து மர்மமாக இறந்து வருகின்றன. இதனால் கர்நாடகா கால்நடை மருத்துவ குழுவினர் பன்றிகளின் உடலை பிரேத பரிசோதனை செய்து, மாதிரிகளை சேகரித்து உத்தரபிரதேசத்தில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தாக்கி, காட்டுப்பன்றிகள் இறந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

21 காட்டுப்பன்றிகள் சாவு

இந்தநிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுப்பன்றிகள் அதிகளவு உள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது வனப்பகுதியில் காட்டுப்பன்றிகள் இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 1 வாரத்தில் 18 பன்றிகள் இறந்து உள்ளன.

தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் பன்றிகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் அதன் மாதிரிகளை சேகரித்து இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் நேற்று மேலும் 3 காட்டுப்பன்றிகள் இறந்து கிடப்பதை வனத்துறையினர் பார்த்தனர். தொடர்ந்து உடல்களை கைப்பற்றி உடனடியாக அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டனர்.

தடுப்பு வேலிகள்

மேலும் முதுமலை தெப்பக்காடு முகாம் வளாகத்தில் காட்டுப்பன்றிகள் நுழையாமல் இருக்க வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தடுப்பு வேலிகள் அமைத்து வருகிறார்கள்.

இதனிடையே முதுமலை வனப்பகுதியில் தொற்றுநோய் தடுப்பு பிரிவு மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் ஆய்வு நடத்தினர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் கூறும்போது, கர்நாடகாவின் பந்திப்பூர் வனப்பகுதியில் 22 காட்டுப்பன்றிகள் உயிரிழந்து உள்ளன. முதுமலையில் இதுவரை 21 பன்றிகள் இறந்துள்ளது. அதன் உடற்பாகங்கள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன் முடிவுகள் வந்த பின்னரே ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தாக்கி இறந்ததா என்பது தெரிய வரும். இருப்பினும் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.

இந்தநிலையில் மசினகுடி பகுதியில் பன்றிகள் வளர்ப்பு பண்ணையில் ஊட்டி கால்நடை பராமரிப்பு மருத்துவக் குழுவினர் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பன்றிகள் வளர்ப்போருக்கு விளக்கம் அளித்தனர்.



Next Story