குமரியில் தொடர் மழையால் 210 குளங்கள் நிரம்பின
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் 210 குளங்கள் நிரம்பின.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் 210 குளங்கள் நிரம்பின.
தொடர் மழை
குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. சாரலாகவும், பரவலாகவும் மழை பெய்து வந்த நிலையில் நேற்றுமுன்தினம் பலத்த மழையாக பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த மழை 2-வது நாளாக நேற்று காலையிலும் நீடித்தது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை 4 மணி முதல் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக இடைவிடாது மழை பெய்தது. அதன் பிறகு விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி சென்ற மாணவ, மாணவிகள் குடைபிடித்தபடி சென்றதை காணமுடிந்தது.
மழை அளவு
கொட்டாரம், மயிலாடி, சுசீந்திரம், பூதப்பாண்டி, தடிக்காரன்கோணம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை மிதமாக பெய்தது. அதன்படி நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேர நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக கொட்டாரத்தில் 14.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.
இதேபோல் மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பெருஞ்சாணி-2.6, களியல்-3, குழித்துறை- 4.2, மயிலாடி- 10.2, நாகர்கோவில்- 5.2, புத்தன்அணை- 3, தக்கலை- 1.4, குளச்சல்- 6, இரணியல்- 8.4, பாலமோர்- 1.4, மாம்பழத்துறையாறு- 2, அடையாமடை- 4.2 என பதிவாகி இருந்தது.
210 குளங்கள் நிரம்பின
தொடர் மழையின் காரணமாக பாசன குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்களில் 210 குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. 500-க்கும் மேற்பட்ட குளங்கள் 75 சதவீதம் நிரம்பியுள்ளது. மற்ற குளங்களுக்கும் தண்ணீர் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென்மேற்கு பருவமழை பொய்த்த நிலையில் தற்போது பெய்த மழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அணைகளுக்கு நீர்வரத்து
மழையால் பேச்சிப்பாறை அணைக்கு நேற்று வினாடிக்கு 479 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 580 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 103 கனஅடி தண்ணீரும், அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டது.
தொடர் மழையால் திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் அதிகமாக விழுகிறது. மேலும் அங்கு குளுமையான சூழல் நிலவுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தபடி சென்றதை காணமுடிந்தது.