212 திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவி
கள்ளக்குறிச்சியில் நடந்த சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் 212 திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகளை ககெ்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகளாக 37 பேருக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை, தொண்டு நிறுவன உதவியுடன் 2 பேருக்கு தையல் எந்திரங்கள், தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் 7 பேருக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மானியம், 38 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா, 60 பேருக்கு குடும்ப அட்டை, 2 பேருக்கு தலா ரூ.2 லட்சத்து 10 ஆயிரம மதிப்பில் பசுமை வீடுகள், 62 பேருக்கு அடையாள அட்டை, 4 பேருக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு அட்டை ஆகியவற்றை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழக அரசு எப்போதும் திருநங்கைகளின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ளது.
வாழ்க்கை தரம்
திருநங்கைகளின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே அரசு சார்பில் வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களையும் பெற்று திருநங்கைகள் தங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். முன்னதாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 55 மனுக்களை கலெக்டரிடம் திருநங்கைகள் வழங்கினர். அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில் மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் சந்திரசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.