வேதாரண்யேஸ்வரர் கோவில் பெயரில் 2,122 ஏக்கர் நிலத்துக்கு பட்டா
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் பெயரில் 2,122 ஏக்கர் நிலத்துக்கு பட்டா பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் பெயரில் 2,122 ஏக்கர் நிலத்துக்கு பட்டா பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
நிலங்களை மீட்க நடவடிக்கை
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.
அதேபோல் நிலவுடமை பதிவு மேம்பாட்டு திட்ட நடவடிக்கையின் போது தவறுதலாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட இனங்கள் மற்றும் வருவாய்த்துறையில் கணினி சிட்டா தயாரிக்கும் போது தவறுதலான பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட இனங்கள் குறித்து சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்தின் மூலம் மாவட்ட வருவாய் நிர்வாகத்திடம் மேல்முறையீடு செய்து அவற்றை மீட்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
வேதாரண்யேஸ்வரர் கோவில் நிலம்
அந்த வகையில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான அகஸ்தியம்பள்ளி கிராமத்தை சேர்ந்த 2,122.10 ஏக்கர் நிலங்களுக்கு கோவில் பெயரில் பட்டா பெறப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகவும், சப்த விடங்க தலங்களில் ஒன்றாகவும் விளங்கும் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான அகஸ்தியம்பள்ளி கிராமத்தில் உள்ள நிலங்கள் வேதாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சர்வமான்ய நிலங்கள் எனவும், அந்த நிலங்கள் உப்பு நிறுவனத்தின் அனுபவத்தில் உள்ளதாகவும், அந்த நிலங்களுக்கு உப்பு நிறுவனம் குத்தகை தொகையினை கோவிலுக்கு வழங்கி வருவதாகவும், நிலங்களை சர்வே செய்து கோவில் பெயரில் பட்டா வழங்க வேண்டும் என சென்னை உதவி நிலவரித்திட்ட அலுவலர் (வடக்கு) நீதிமன்றத்தில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் தொடர்ந்து முறையீடு செய்யப்பட்டு வந்தது.
சாதகமான தீர்ப்பு
இந்த வழக்கில் முதல்-அமைச்சர் சிறப்பு கவனம் செலுத்தி துரித நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் அகஸ்தியம்பள்ளி கிராமத்தில் உள்ள 2122.10 ஏக்கர் நிலங்களுக்கு பட்டா பெற வேதாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் தகுதியுடையவராகிறார் என சென்னை உதவி நிலவரித்திட்ட அலுவலரால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையின் நீண்ட கால சட்டப் பேராட்டங்களுக்கு பின்னர் இந்த தீர்ப்பு கோவிலுக்கு சாதகமாக கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் நிலங்களுக்கு பட்டா பெற நாகை மாவட்ட கலெக்டருக்கு கோவில் செயல் அலுவலரால் விண்ணப்பிக்கப்பட்டு, தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு கோவிலுக்கு சொந்தமான 2122.10 ஏக்கர் நிலங்களுக்கு வேதாரண்யேஸ்வரர் கோவில் பெயரிலேயே பட்டா பெறப்பட்டுள்ளது.
கோவில் பெயரில் பட்டா
இதேபோல் இதர நிலங்களுக்கும் கோவில் பெயரிலேயே பட்டா பெறுவதற்கு துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஒட்டுமொத்தமாக கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் எங்கிருந்தாலும் அவற்றை கண்டறிந்து அந்த கோவில் வசம் ஒப்படைக்கும் பணிகளில் இந்த அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் உறுதுணையாய் செயலாற்றும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.