தூத்துக்குடி சிவன் கோவிலில் 216 சிவலிங்க பூஜை
சிவராத்திரியையொட்டி தூத்துக்குடி சிவன் கோவிலில் 216 சிவலிங்க பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிவராத்திரியன்று விரதம் இருந்து சிவனை வழிபட்டால் பாவங்கள் விலகும். சிவபூஜை எல்லா பூஜைகளிலும் உயர்ந்தது. சிவனை வழிபடுபவர்கள் அனைத்து செல்வங்களையும் அடைவார்கள் என்பது ஐதீகம். ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி நாள் சிவராத்திரி ஆகும். அதன்படி நேற்று சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கோவில்களில் நேற்று இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
தூத்துக்குடி சிவன் கோவிலில் நேற்று சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சுவாமிக்கு நேற்று மாலை சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு அலங்கார தீபாரானை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு 216 சிவலிங்க பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கில் சிறுவர்களுக்கான இந்து சமய சான்றோர்கள் மாறுவேடப்போட்டி, தேவாரப்பாடல் இசைப்போட்டி, பரதநாட்டிய போட்டிகள் நடந்தன. இதில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
முன்னதாக சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. சனிபிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி ஆகிய 2 நிகழ்வுகள் ஒரே நாளில் வருவது மிகவும் சிறப்பானதாகும். சனி பிரதோஷத்தை முன்னிட்டு தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் நந்தி பகவான் மற்றும் சுவாமிக்கு பால், தயிர், விபூதி, சந்தனம், பழங்கள் உள்ளிட்ட 16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றபடி சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்ச்செல்வி, தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் உள்பட பலர் கலந்து கொண் டனர்.