217-வது சிப்பாய் புரட்சி நினைவு தினம்


217-வது சிப்பாய் புரட்சி நினைவு தினம்
x

வேலூர் சிப்பாய் புரட்சியின் 217-வது நினைவு தினத்தையொட்டி மக்கான் சந்திப்பில் உள்ள நினைவு தூணுக்கு அமைச்சர் துரைமுருகன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

வேலூர்

சிப்பாய் புரட்சி நினைவு தினம்

இந்திய சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட முதல் சிப்பாய் புரட்சி வேலூர் கோட்டையில் 1806-ம் ஆண்டு ஜூலை 10-ந் தேதி நடந்தது. ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராக நடந்த இந்த புரட்சியில் ஏராளமான இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் நினைவாக வேலூர் கோட்டை அருகே உள்ள மக்கான் சந்திப்பில் சிப்பாய் புரட்சி நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு ஆண்டுதோறும் ஜூலை மாதம் 10-ந் தேதி சிப்பாய் புரட்சியில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று 217-வது சிப்பாய் புரட்சி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

அமைச்சர் துரைமுருகன்

இதையொட்டி சிப்பாய் புரட்சியில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம், நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு, அலங்கரிக்கப்பட்ட சிப்பாய் புரட்சி நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், அமலுவிஜயன், மேயர் சுஜாதா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு, வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், முன்னாள் படைவீரர்கள் நல அலுவலக உதவி இயக்குனர் ஞானசேகர், மண்டலக்குழு தலைவர்கள், கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள், என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்கள் சிப்பாய் புரட்சி நினைவு தூணுக்கு மரியாதை செலுத்தினர்.

இதேபோன்று வேலூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் சிப்பாய் புரட்சி நினைவு தூணுக்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில் மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதில், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஜெகன்நாதன், பாபு, மாநகராட்சி கவுன்சிலர் சுமதிமனோகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story