கிராம பஞ்சாயத்துகளுக்கு ரூ.53¾ லட்சம் மதிப்பில் 22 மின்கல வண்டிகள்; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்
திடக்கழிவு பணிகள் மேற்கொள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கு ரூ.53¾ லட்சம் மதிப்பில் 22 மின்கல வண்டிகளை, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
திருச்செந்தூர்:
திடக்கழிவு பணிகள் மேற்கொள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கு ரூ.53¾ லட்சம் மதிப்பில் 22 மின்கல வண்டிகளை, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
மின்கல வண்டிகள்
திருச்செந்தூர் யூனியன் அலுவலக வளாகத்தில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் மூலம் திடக்கழிவு பணிகள் மேற்கொள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கு மின்கல வண்டிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு திருச்செந்தூர் யூனியனுக்கு உட்பட்ட அம்மன்புரம், காயாமொழி, மேலத்திருச்செந்தூர், மூலக்கரை, நல்லூர், பள்ளிப்பத்து, பிச்சுவிளை, வீரமாணிக்கம், வீரபாண்டியன்பட்டணம், வீரபாண்டியன்பட்டணம் (ரூரல்) ஆகிய 10 கிராம பஞ்சாயத்துகளுக்கு மொத்தம் ரூ.53 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பில் 22 மின்கல வண்டிகள் வழங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கலந்துகொண்டவர்கள்
நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டரும், திட்ட இயக்குனருமான தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் வாமனன், யூனியன் தலைவர் செல்வி வடமலைபாண்டியன், ஆணையர் முத்துகிருஷ்ணராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் (பஞ்சாயத்து) பொங்கலரசி, தி.மு.க. வர்த்தக அணி மாநில இணை செயலாளர் உமரி சங்கர், திருச்செந்தூர் நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ், நகர தி.மு.க. செயலாளர் வாள்சுடலை, பஞ்சாயத்து தலைவர்கள் எல்லமுத்து, ராஜேஸ்வரன், மகாராஜா, ஞானராஜ், திருச்செந்தூர் நகராட்சி கவுன்சிலர்கள் செந்தில்குமார், தினேஷ் கிருஷ்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.