கோவிலில் யாக சாலை அமைக்க பள்ளம் தோண்டியபோது 22 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு


கோவிலில் யாக சாலை அமைக்க பள்ளம் தோண்டியபோது 22 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு
x

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் யாக சாலை அமைக்க பள்ளம் தோண்டிய போது 22 ஐம்பொன் சிலைகள், 100-க்கும் மேற்பட்ட பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. 462 பழங்கால செப்பேடுகளும் இந்த பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டன.

நாகை,

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள சட்டைநாதர் கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் அடுத்த மாதம்( மே) 24-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது.

கும்பாபிஷேகத்துக்காக யாக குண்டம் அமைக்க நேற்று மதியம் கோவில் வளாகத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் களிமண் எடுப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது.

ஐம்பொன் சிலைகள்

சுமார் 2 அடி ஆழம் பள்ளம் தோண்டிய போது மண்ணில் இருந்து வித்தியாசமாக சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த பணியாளர்கள் மிகவும் கவனமாக பள்ளத்தில் இருந்து மண்ணை வெளியேற்றினர்.

அப்போது பூமிக்கு அடியில் அம்பாள், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சண்முகநாதர், முருகன், விநாயகர், சோமஸ்கந்தர், சண்முகநாதர், இடும்பன், நால்வர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட 22 ஐம்பொன் சிலைகள் மண்ணில் புதைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 22 ஐம்பொன் சிலைகளையும் பணியாளா்கள் பள்ளத்தில் இருந்து வெளியே எடுத்தனர். இந்த சிலைகள் அனைத்தும் சுமார் ½ அடி முதல் 2½ அடி வரை உயரத்தில் இருந்தன.

பூஜை பொருட்கள்- செப்பேடுகள்

மேலும் இந்த பள்ளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உடுக்கை, மணி, கலசம், சலங்கை, ஐம்பொன் பானைகள், தண்ணீர் குடுவை, சொம்பு, தட்டுகள், விளக்கு, தீபாராதனை தட்டு, உள்ளிட்ட பூஜை பொருட்களும் குவியல் குவியலாக புதைந்து இருந்தன.

இந்த பொருட்களையும் மிகவும் கவனமாக சேகரித்து பணியாளர்கள் பள்ளத்தில் இருந்து வெளியே கொண்டு வந்து அடுக்கி வைத்தனர்.

இது தவிர இந்த பள்ளத்தில் இருந்து திருஞானசம்பந்தர் இயற்றிய 462 தேவார பதிக செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டது. இவை அனைத்தும் சுமார் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என கூறப்படுகிறது.

பாதுகாப்பாக வைத்தனர்

கண்டெடுக்கப்பட்ட சிலைகள், பூஜை பொருட்கள், செப்பேடுகள் ஆகியவற்றின் மொத்த மதிப்பை கணக்கிடும் பணி நடந்து வருகிறது. சிலைகள் மீட்கப்பட்ட தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கோவில் வளாகத்துக்குள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.

இதனால் கோவில் நிர்வாகத்தினர் சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை கண்டெடுக்கப்பட்ட பொருட்களை பாதுகாப்பாக கோவில் வளாகத்துக்குள் வைத்துள்ளனர்.


Next Story