ரூ.22 லட்சம் 'அபேஸ்' செய்த வழக்கில்சூரத் வாலிபர் கைது


ரூ.22 லட்சம் அபேஸ் செய்த வழக்கில்சூரத் வாலிபர் கைது
x
தினத்தந்தி 7 April 2023 12:30 AM IST (Updated: 7 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

போடியை சேர்ந்த மென்பொருள் நிறுவன ஊழியரின் வங்கிக் கணக்கில் ரூ.22 லட்சம் ‘அபேஸ்’ செய்த சூரத் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தேனி


மென்பொருள் நிறுவன ஊழியர்

தேனி மாவட்டம், போடி அருகே ராசிங்காபுரத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ரவீந்தர் (வயது 32). இவர் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவருடைய செல்போன் எண்ணுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், மின் கட்டணம் செலுத்தாததால் அவருடைய வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணுக்கு ரவீந்தர் தொடர்பு கொண்டார்.

எதிர் முனையில் பேசிய நபர், சென்னை மின்வாரிய அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறினார். மேலும் அவர், மின் இணைப்புக்கான கணக்கை செயல்பாட்டில் கொண்டு வருவதற்கு 'டீம் வியூவர்' என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, அதற்கான பயனர் கணக்கு விவரத்தை தெரிவிக்குமாறு கூறினார்.

ரூ.18 லட்சம் வங்கிக்கடன்

ரவீந்தரும் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து விவரங்களை தெரிவித்தார். பின்னர் அந்த நபர் ஒரு இணையதள இணைப்பை அனுப்பி அதில் சென்று ரூ.30 கட்டணம் செலுத்துமாறு கூறினார். அதன்படி ரவீந்தர் தனது வங்கிக் கணக்கில் இருந்து இணையவழியில் ரூ.30 அனுப்பினார்.

இந்நிலையில், 'டீம் வியூவர்' செயலி மூலம், மோசடி நபர்கள், ரவீந்தரின் செல்போனில் இருந்த விவரங்களை திருடினர். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, அவருடைய செல்போன் எண்ணுக்கு வரும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகளை தங்களுக்கு வரும் வகையில் மாற்றிக் கொண்டனர். பின்னர், ரவீந்தரின் பெயரில் அவருக்கு சேமிப்பு கணக்கு உள்ள தனியார் வங்கியில் ஆன்லைன் மூலம் உடனடி தனிநபர் கடன் கேட்டு மோசடி நபர்கள் விண்ணப்பித்தனர். வங்கியில் இருந்து வந்த கடன் தொடர்பான விவரங்கள் சரிபார்ப்பு அழைப்புகளில் மோசடி நபர்களே பேசி ரவீந்தரின் செல்போனில் திருடிய விவரங்களை தெரிவித்தனர். அதன்பேரில் ரூ.18 லட்சம் கடன் வழங்கப்பட்டது. அந்த கடன் தொகை மற்றும் அவருடைய வங்கிக் கணக்கில் ஏற்கனவே இருந்த பணம் சுமார் ரூ.4 லட்சத்து 32 ஆயிரம் என மொத்தம் ரூ.22 லட்சத்து 32 ஆயிரத்தை மர்ம நபர்கள் 'அபேஸ்' பெய்தனர்.

வழக்குப்பதிவு

தனது வங்கிக் கணக்கில் இருந்த பணம் மாயமானது மற்றும் தனது பெயரில் கடன் பெற்ற விவரங்கள் அவருக்கு வந்த குறுஞ்செய்திகள் மூலம் ரவீந்தருக்கு தெரியவந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக தேனி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். ரவீந்தரின் வங்கிக் கணக்கில் இருந்து பல்வேறு வங்கிக் கணக்குகள், கிரெடிட் கார்டு போன்றவற்றுக்கு பணம் அனுப்பியது தெரியவந்தது. அந்த விவரங்களை வைத்து நடத்திய விசாரணை. சம்பந்தப்பட்ட கிரெடிட் கார்டு குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்த ஜாவன் பந்தேரி என்பவரின் பெயரில் இருப்பது தெரியவந்தது.

தனிப்படை

இந்த மோசடியில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில், சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன் தலைமையில், ஏட்டு பழனிசாமி, போலீஸ்காரர் ஜெபராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் சூரத் நகருக்கு சென்று ஜாவன் பந்தேரியை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவருக்கே தெரியாமல் இந்த மோசடி நடந்து இருப்பதாகவும், அதன் பின்னணியில் சூரத்தை சேர்ந்த அசோக், விப்புல், குணால், சந்தோஷ் மகேந்திரபாய் (22) ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. அவர்களில் குணால், விப்புல், சந்தோஷ் மகேந்திரபாய் ஆகியோரை தனிப்படையினர் பிடித்தனர். அசோக்கை தேடிச் சென்றபோது, தேனி தனிப்படை போலீசார் இருக்கும் இடத்துக்கு சூரத் நகர குற்றப்பிரிவு போலீசார் வந்தனர்.

ரூ.2 கோடி மோசடி

தனிப்படையினர் பிடித்த விப்புல், குணால் மற்றும் தேடி வரும் அசோக் ஆகியோர் சூரத்தில் நடந்த ரூ.2 கோடி வைரக்கற்கள் மோசடியில் தொடர்புடைய நபர்கள் என்றும், தங்கள் வழக்கில் அவர்களை கைது செய்வதாகவும் கூறினர். பின்னர் தமிழக போலீசார் உதவியுடன் அசோக்கையும் சூரத் போலீசார் கைது செய்தனர்.

அசோக், விப்புல், குணால் ஆகிய 3 பேரும் சூரத் சிறையில் அடைக்கப்பட்டனர். மற்றொரு நபரான சந்தோஷ் மகேந்திரபாயை தேனிக்கு தனிப்படையினர் அழைத்து வந்தனர். அந்த வழக்கில் அவரை கைது செய்து தேனி மாவட்ட சிறையில் அடைத்தனர். சூரத் சிறையில் இருக்கும் மற்ற 3 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தினால் தான் மோசடி குறித்த பல விவரங்கள் தெரிய வரும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.


Related Tags :
Next Story