முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவர்கள் 22 பேரை தலைமை ஆசிரியை அடித்ததாக புகார்


முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவர்கள் 22 பேரை தலைமை ஆசிரியை அடித்ததாக புகார்
x

ஓமலூர் அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் 22 மாணவ-மாணவிகளை தலைமை ஆசிரியை அடித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தாசில்தார், தொடக்க கல்வி அலுவலர் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

சேலம்

ஓமலூர்:

அரசு மேல்நிலைப்பள்ளி

ஓமலூர் அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சுமார் 900-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியையாக வசந்தகுமாரி என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று 8-ம் வகுப்பு 'பி' பிரிவு மாணவர்களுக்கு தலைமை ஆசிரியையின் அறையின் அருகே தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பாக வெளியிடப்பட்ட ஒரு விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அந்த விழிப்புணர்வு வீடியோவை மாணவர்கள் யாரும் கூர்ந்து கவனிக்காமல் ஒருசிலர் சத்தம் போட்டுக்கொண்டு இருந்ததாக தெரிகிறது.

அடித்ததாக புகார்

அப்போது அங்கு வந்த தலைமை ஆசிரியை வசந்தகுமாரி, அமைதியாக இருக்கும்படி கூறியதுடன், சத்தம் போட்ட மாணவ-மாணவிகளை அடையாளம் காண்பிக்கும்படி சக மாணவ-மாணவிகளிடம் கேட்டார். ஆனால் யாரும் சத்தம் போட்ட மாணவர்களை காட்டிக்கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த தலைமை ஆசிரியை வசந்தகுமாரி, 22 மாணவ-மாணவிகளை பிரம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மாணவிகள் சிலர் பெற்றோர்களிடம் புகார் தெரிவித்தனர்.

இதையறிந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியை முற்றுகையிட்டனர். தொடர்ந்து காயம் அடைந்த மாணவிகளில் 5 பேர் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் அவர்கள் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பி சென்றனர்.

விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த ஓமலூர் தாசில்தார் வல்லமுனியப்பன் மற்றும் ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தொல்காப்பியன், தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷ் ஆகியோர் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியை மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது தலைமை ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதன் பேரில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story