காரில் கடத்திச் சென்ற 228 மது பாட்டில்கள் பறிமுதல்
தூசி அருகே காரில் கடத்திச் சென்ற 228 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூசி
செய்யாறு சரக காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட தூசி போலீசாருக்கு காரில் மதுபாட்டில்கள் கடத்தி செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தூசி சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் செய்யாறு - காஞ்சீபுரம் சாலை, அப்துல்லாபுரம் கூட்டுச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபடடனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில் 228 மதுபாட்டில்கள் கடத்தி செல்வது தெரிய வந்தது. காரில் இருந்தவர்களிடம் விசாரித்த போது சுருட்டல் கிராமத்தை சேர்ந்த முருகன் (வயது 40), அன்பழகன், சுருட்டல் மணி (63) என்பது தெரிய வந்தது.
விசாரணையில் அவர்கள், டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி கொண்டு சுதந்திரதின விடுமுறை நாளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றதாக கூறினர்.
இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மதுபாட்டில்கள், காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.