திருச்செந்தூரில் ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரி வீடுபுகுந்து 23 பவுன் திருட்டு


திருச்செந்தூரில் ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரி வீடுபுகுந்து 23 பவுன் திருட்டு
x

திருச்செந்தூரில் ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரி வீடுபுகுந்து 23 பவுன் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி வீட்டில் 23 பவுன் தங்க நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஓய்வுபெற்ற அதிகாரி

திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது 61). இவர் மத்திய அரசு நிறுவனத்தில் தலைமை மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த மாதம் 15-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் சண்முகநாதன் பெங்களூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் நேற்று முன்தினம் மாலையில் சண்முகநாதன் வீட்டின் முன் கதவு திறந்து கிடப்பதாக வீட்டில் வேலை பார்க்கும் பெண் அவருடைய தம்பி கார்த்திகேயனிடம் தெரிவித்துள்ளார். இந்த தகவலை உடனடியாக சண்முகநாதனுக்கு அவரது தம்பி தெரிவித்துள்ளார். பதறிப்போன சண்முகநாதன் குடும்பத்தினர் நேற்று அதிகாலையில் திருச்செந்தூர் வந்த சண்முகநாதன் வீட்டிற்கு சென்று பார்த்தார்.

நகைகள், பொருட்கள் திருட்டு

வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது துணிகள் சிதறிக்கிடந்தன. மேலும் வீட்டில் உள்ள பீரோ மற்றும் கட்டில் கபோர்டு லாக்கர் உடைந்து கிடந்தது. கட்டில் கபோர்டு லாக்கரில் வைத்திருந்த 23 பவுன் தங்க நகைகளையும், பிரோவில் வைத்திருந்த 5 வாட்சுகளும் திருடப்பட்டிருந்தது. சண்முகநாதன் வெளியூர் சென்றிருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரது வீடுபுகுந்து நகைகள், பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து அவர் திருச்செந்தூர் கோவில் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் சம்ப வீட்டில் பதிவான தடையங்களை‌ பதிவு செய்தனர். திருட்டு போன நகை மற்றும் வாட்சிகளின் மொத்த மதிப்பு ரூ.7 லட்சத்து 6 ஆயிரத்து 500-ம் என கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடுபுகுந்து நகைகள், பொருட்களை திருடிய மர்ம நபர்களை தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story