பிளஸ்-2 மாணவியை பலாத்காரம் செய்த வழக்கு:தொழிலாளிக்கு 23 ஆண்டு சிறை நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு


பிளஸ்-2 மாணவியை பலாத்காரம் செய்த வழக்கு:தொழிலாளிக்கு 23 ஆண்டு சிறை நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு
x

பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 23 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 23 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பாலியல் பலாத்காரம்

அழகியபாண்டியபுரம் பெருந்தலைக்காடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 38), தொழிலாளி. முருகனின் உறவுக்கார சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். 17 வயதான அவர் பிளஸ்-2 படித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 27-4-2016 அன்று மாணவி வீட்டுக்கு முருகன் சென்றார்.

அங்கு அவர் மட்டும் தனியாக இருந்தார். இதனை முருகன் சாதகமாக எடுத்துக்கொண்டு அவரை கேரளாவுக்கு காரில் கடத்தி சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள ஒரு லாட்ஜில் அடைத்து வைத்து மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதனை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.

23 ஆண்டு சிறை

இதற்கிடையே மகளை காணவில்லை என அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்தநிலையில் மாணவியை முருகன் மீண்டும் அழைத்து வந்து வீட்டில் விட்டு சென்றார். பின்னர் தனக்கு நடந்த கொடுமையை மாணவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர் இதுகுறித்து கீரிப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ஜோசப் ஜாய் நேற்று முருகனை குற்றவாளி என தீர்ப்பு கூறினார்.

அதில், முருகனுக்கு 23 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் அபராத தொகையை கட்ட தவறினால், மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அரசு வக்கீல் முத்துமாரி ஆஜரானார்.

--


Next Story