24 மணி நேரமும் மது விற்பனை; கேள்விக்குறியான பெண்களின் பாதுகாப்பு
24 மணி நேரமும் நடைபெறும் மது விற்பனையால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.
குறைதீர் நாள் கூட்டம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் நமங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் வந்த மக்கள் அளித்த மனுவில், செந்துறை ஒன்றியம், நமங்குணம் கிராமத்தில் சட்ட விரோதமாக 24 மணி நேரமும் மதுபான கூடம் அமைத்து மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் துங்கபுரம்- நமங்குணம் செல்லும் சாலையில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் செல்வது அச்சுறுத்தலாக உள்ளது. மதுப்பிரியர்கள் சாலையில் அமர்ந்து அவ்வழியாக செல்லும் பெண்களை கிண்டல் செய்வது வாடிக்கையாக உள்ளது. சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு
சுதந்திர போராட்ட வீரரின் வாரிசுதாரர் ஒருவர் குடும்பத்துடன் வந்து அளித்த மனுவில், செந்துறை தாலுகா, நெய்வனம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவர் தனக்கு சொந்தமான வீட்டை விற்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை சந்தித்து வீட்டை விற்ற பணத்தையும் அளித்து இந்திய சுதந்திரத்திற்காக தன்னையும் இந்திய தேசிய ராணுவத்தில் இணைத்துக்கொண்டார். பின்னர் கடந்த 1978-ம் ஆண்டு இறந்துவிட்டார். அதன் பின்னர் சுதந்திர போராட்ட வீரரின் மனைவி தனக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பலமுறை அதிகாரிகளிடமும், மாவட்ட கலெக்டரிடமும் மனு அளித்துள்ளார். அவரும் கடந்த 2018-ம் ஆண்டு இறந்துவிட்டார். ஆனால் இதுநாள் வரை தங்களின் குடும்பத்திற்கு மாவட்ட நிர்வாகம் வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. அதனால் தான் வாடகை வீட்டிலேயே வசித்து வருகிறோம். சுமார் 35 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்துள்ளதால் தனக்கு வீட்டுமனை பட்ட வழங்க வேண்டும் என கூறியுள்ளார். இதேபோல் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மேலக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என மனு அளித்தனர்.
செம்மண் வேண்டும்
ஆண்டிமடம் அருகே அழகாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சிலுவைச்சேரி கிராமத்தை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் சுமார் 40 பேர் நர்சரி கார்டன்கள் வைத்துள்ளோம். இந்த நர்சரிகளுக்கு தேவையான செம்மண் அருகே உள்ள கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் எடுத்து நர்சரிகளுக்கு பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
சமூக ஆர்வலரும், வக்கீலுமான அருள்ராஜா அளித்த மனுவில், மழை காலங்களில் இயங்கும் டிப்பர் லாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும். சுண்ணாம்பு கற்களை பல்வேறு சுரங்கங்களிலிருந்து தினந்தோறும் டிப்பர் லாரிகள் மூலம் அதிக பாரத்துடன், தார்ப்பாய் போடாமல் அரியலூரில் உள்ள சிமெண்டு ஆலைகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது. பெரும்பாலான டிப்பர் லாரிகள் போட்டி போட்டு செல்வதால் லாரிகளிலிருந்து சுண்ணாம்புக்கல் சிதறி சாலையில் விழுகிறது. இதை யாரும் அகற்றுவதில்லை. நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் சாலை பராமரிப்பு செய்வதில்லை.
வெயில் காலங்களில் இந்த மண் துகள்கள் காற்றில் பறக்கிறது. மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாற்றம் அடைந்து விடுகிறது. குறிப்பாக அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம் மற்றும் வி.கைகாட்டி ஆகிய ஊர்களில் சாலையின் இருபுறமும் சுண்ணாம்புக்கல் மண்கள் அதிகளவில் வெள்ளை நிற பட்டைகளை மறைத்து மேடாக தேங்கியுள்ளது. இவ்வழியே செல்லும் கனரக வாகனங்கள் இருசக்கர வாகன ஓட்டிகளை கண்டு கொள்ளாமல் செல்கின்றனர். இதனால் அதிகளவில் சேறும், சகதியுமான மண்ணில் வழுக்கி விபத்துகள் நிகழ்ந்துள்ளன. எனவே ஜெயங்கொண்டம்-அரியலூர் சாலையில் மழைக்காலங்களில் இயங்கும் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.