உண்ணாவிரதம் இருந்த 24 பேர் கைது
உண்ணாவிரதம் இருந்த 24 பேர் கைது
திருப்பூர்,
திருப்பூர் அருகே முறைகேடாக இயங்கி வரும் கல் குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி கலெக்டர் அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய 10 பெண்கள் உள்பட 24 பேரை போலீசார் கைது செய்தனர்.
24 பேர் கைது
பல்லடம் தாலுகா கோடங்கிப்பாளையத்தில் முறைகேடாக அனுமதி பெற்று இயங்கி வரும் கல் குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்யக்கோரி அப்பகுதியை சேர்ந்த விவசாயி செந்தில்குமார் என்பவர் 10-வது நாளாக நேற்று காலவரையற்ற உண்ணாவிரதத்தை அவருடைய சொந்த நிலத்தில் இருந்து வருகிறார். பல்லடம் தாசில்தார் தலைமையில் ஆய்வு செய்த பின்பும் இதுவரை 2 குவாரிகளின் உரிமம் ரத்து செய்யப்படாமல் உள்ளது. செந்தில்குமாரின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் என 10 பெண்கள் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள்.
உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவதற்கு முன் கரூரில் குவாரி உரிமையாளர்களால் வாகனம் ஏற்றி கொலை செய்யப்பட்ட சமூக போராளி ஜெகநாதனுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வக்கீல் ஈசன் முருகசாமி உள்ளிட்ட அமைப்பை சேர்ந்தவர்களும் உண்ணாவிரதம் இருந்தனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்த தெற்கு போலீசார் உண்ணாவிரதம் இருந்த 10 பெண்கள் உள்பட 24 பேரை கைது செய்து வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
ஆர்.டி.ஓ. பேச்சுவார்த்தை
மண்டபத்தில் வைக்கப்பட்ட 24 பேரும், மதியம் 12 மணி முதல் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். போலீசார் பேசியும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். திருப்பூர் ஆர்.டி.ஓ. பண்டரிநாதன், தெற்கு தாசில்தார் கோவிந்தராஜ், பல்லடம் தாசில்தார் நந்தகோபால், திருப்பூர் தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் பிச்சையா ஆகியோர் உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் இரவு 7 மணிக்கு மேலும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.