திருப்பாதிரிப்புலியூரில் வரி பாக்கி செலுத்தாததால் 24 கடைகளுக்கு 'சீல்' வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு


திருப்பாதிரிப்புலியூரில் வரி பாக்கி செலுத்தாததால் 24 கடைகளுக்கு சீல் வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
x

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் வரி பாக்கி செலுத்தாத 24 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டதை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

திருப்பாதிரிப்புலியூர்,

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வள்ளியம்மை பஜார் மற்றும் பாடலி பஜாரில் 50-க்கும் மேற்பட்ட நகைக்கடை மற்றும் நகை அடமான கடைகள் உள்ளன. இதில் வள்ளியம்மை பஜாரில் உள்ள கடை உரிமையாளர்கள் வரி பாக்கி செலுத்தவில்லை என்று கூறி கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் குப்பை தொட்டி வைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து வள்ளியம்மை பஜார், பாடலி பஜாரில் உள்ள சுமார் 24 கடைகளில் உரிமையாளர்கள் வரி பாக்கி செலுத்தக்கோரி மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும் வரி பாக்கி செலுத்தாததால் நேற்று காலை மாநகராட்சி அதிகாரிகள், சம்பந்தப்பட்ட 24 கடைகளை பூட்டி 'சீல்' வைத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த கடை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள், மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து திருப்பாதிரிப்புலியூர் நான்கு முனை சந்திப்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுபற்றி அறிந்து வந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், மாநகராட்சி சார்பில் நேற்று இரவு (அதாவது நேற்று முன்தினம்) வரி பாக்கி செலுத்தும்படி நோட்டீஸ் கொடுத்துவிட்டு, காலையில் வந்து கடைக்கு 'சீல்' வைக்கின்றனர். மேலும் எந்தவொரு கடைகளுக்கும் முறையாக வரி விதிக்கப்படவில்லை. ஒரே அளவுள்ள இரு கடைகளுக்கு வரி வித்தியாசம் மாறுபடுகிறது. அதனால் முறையாக வரி தொகையை அறிவித்து, அதனை செலுத்த காலஅவகாசம் வழங்க வேண்டும், மேலும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் எப்படி சீல் வைக்கலாம் என்றனர்.

இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் ¼ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே மாநகராட்சி அதிகாரிகள், கடைகளுக்கு வைத்த சீல் அனைத்தையும் அகற்றி சென்றனர்.


Next Story