புத்தக திருவிழாவை 24 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்
ஊட்டியில் நடந்த புத்தக திருவிழாவை 24 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் முதலாவது நீலகிரி புத்தக திருவிழா-2023 கடந்த 5-ந் தேதி தொடங்கியது. சர்வதேச கணிதவியல் தினத்தையொட்டி சிந்தனை கவிஞர் கவிதாசன் வெல்வதற்கே வாழ்க்கை என்ற தலைப்பிலும், நடிகரும், தமிழ் இலக்கிய பேச்சாளருமான ஜோ.மல்லூரி தமிழ் எங்கள் ஞானச் செருக்கு என்ற தலைப்பிலும் பேசினர்.
விழாவில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர், தமிழ் பற்றாளர்கள் கலந்துகொண்டு பேசினர். முக்கிய நிகழ்ச்சியாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு புத்தக கண்காட்சியை பார்வையிட்டு, மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். தொடந்து புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. அங்கு தினமும் மாவட்ட நிர்வாகம் சார்பில், பள்ளி மாணவ-மாணவிகள், பழங்குடியினர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 5-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடந்த புத்தக திருவிழாவில் ரூ.10.70 லட்சம் மதிப்பில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. 24,095 பார்வையாளர்கள் புத்தக அரங்கினை பார்வையிட்டனர்.