சாராயம், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 242 பேர் கைது
நாகை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் சாராயம் மற்றும் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 242 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் சாராயம் மற்றும் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 242 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சாராய கடத்தல்
நாகை மாவட்டத்தில் மது மற்றும் வெளிமாநில சாராய கடத்தலை தடுக்க தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட்ட மதுவிலக்கு சோதனையில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தியதாக 242 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 13 ஆயிரத்து 915 லிட்டர் புதுச்சேரி மாநில சாராயம், 548 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தலில் ஈடுபட்ட 23 இருசக்கர வாகனங்கள், ஒரு மூன்று சக்கர வாகனம் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
6 கிலோ கஞ்சா
மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது 7 வழக்குகள் மற்றும் புகையிலை போன்ற போதைப் பொருட்களை வைத்திருந்தவர்கள் மீது 83 வழக்குகள், ஆன்லைன் லாட்டரி சம்பந்தமாக 10 வழக்குகளும், கஞ்சா விற்பனை சம்பந்தமாக 6 வழக்குகள் பதிவு செய்து 6 கிலோ 600 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
நாகை போலீஸ் துறையினர் சிறப்பாக செயல்பட்டு மது, கஞ்சா உள்ளிட்ட கடத்தலை தடுக்கவும், போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.
பொதுமக்கள் ஒத்துழைப்பு..
இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். சாராயம், கஞ்சா விற்பனை உள்ளிட்டவைகள் விற்பனை செய்வது தெரியவந்தால் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்கிறோம். தகவல் கொடுப்பவர்களின் ரகசியம் காக்கப்படும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது,