நிரந்தர தீர்வு காண ரூ.248 கோடியில் புதிய திட்டம்


நிரந்தர தீர்வு காண ரூ.248 கோடியில்   புதிய திட்டம்
x

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ரூ.248 கோடியில் புதிய திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ரூ.248 கோடியில் புதிய திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தகவல் தொழில்நுட்ப பூங்கா

குமரி மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க கோணத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு கருத்துரு அனுப்பப்பட்டு, திட்ட மதிப்பீடு தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வேலைகள் முடிந்ததும் விரைவில் பணிகள் தொடங்கப்படும்.

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தைப் பொறுத்தவரையில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது திட்டம் அறிவிக்கப்பட்டு, நிதி ஒதுக்கி, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகு 10 ஆண்டு கால இடைவெளியில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டது. துறைமுகத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக முகத்துவார பகுதியில் அதிகமான அளவில் மணல் குவிந்து மீனவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.

ரூ.248 கோடியில் திட்டம்

இதுகுறித்து நான் அமைச்சராக பொறுப்பேற்றதும் முதல்-அமைச்சர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றேன். நானும், மாவட்ட கலெக்டரும் மூன்று, நான்கு முறை கூட்டங்கள் நடத்தி ஆய்வு செய்துள்ளோம். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உள்ளூர் பகுதியில் உள்ள மக்கள் மற்றும் துறைமுகத்தை பயன்படுத்தக்கூடிய மக்கள் பாரம்பரியமாக பெற்றிருக்கக்கூடிய நிலவியல், நீரியல் சார்ந்த அறிவை பயன்படுத்தி, ஐ.ஐ.டி. போன்ற மத்திய அரசின் நிறுவனங்கள் மற்றும் மீன்வளத்துறை பொறியாளர்கள் அந்த மக்களுடன் இணைந்து ரூ.248 கோடியில் ஒரு புதிய திட்டத்தை தயாரித்து, அதற்கான கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பி, கடந்த வாரம் அனுமதிக்கான கடிதம் பெற்றுள்ளோம். அதனை செயல்படுத்த நமது மீன்வளத்துறை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. வெகுவிரைவில் இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு பெற்று அரசாணை வெளியிடப்படும்.

தவிர்க்க வேண்டும்

எனவே இதை அரசியலுக்காக உண்மைகளை மறைத்துவிட்டு பேசுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. யார் கூறினாலும், கூறாவிட்டாலும் இந்த திட்டம் நிச்சயமாக திட்டமிட்டபடி நடக்கும். இந்த நேரத்தில் இதற்காக போராட்டம் அறிவித்திருப்பதை ஒரு நாடகமாகத்தான் பார்க்க முடிகிறது.

கடலில் பெரிய புயல்காற்று போன்ற பேரிடர் அறிவிப்பு காலங்களில் அந்த வழியாக மீன்பிடிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் ஆபத்து உள்ள பகுதிகளில் லைப்ஜாக்கெட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை மீனவர்கள் பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் மனோதங்கராஜ் கூறினார்.


Next Story