மத்திய அரசை கண்டித்து மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் 248 பேர் கைது
மத்திய அரசை கண்டித்து பெரம்பலூரில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 248 பேரை போலீசார் கைது செய்தனர்.
விலைவாசி உயர்வு
நாட்டில் விலைவாசி உயர்வுக்கும், அதிகரித்து வரும் வேலையின்மைக்கும் காரணமான பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் முன்பு நடந்த இந்த போராட்டத்திற்கு கட்சியின் மாநில குழு உறுப்பினர் சாமி.நடராஜன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலையின்மையை போக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 23 பெண்கள் உள்பட 59 பேரை பாதுகாப்பு பணியில் இருந்த பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர்.
மறியல் போராட்டம்
வேப்பந்தட்டை பஸ் நிறுத்தத்தில் இருந்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.கே.ராஜேந்திரன் தலைமையில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஊர்வலமாக சென்று துணை தபால் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 14 பெண்கள் உள்பட 47 பேரை அரும்பாவூர் போலீசார் கைது செய்தனர். இதேபோல் ஊட்டத்தூர் பிரிவு சாலையில் இருந்து ஊர்வலமாக சென்று பாடாலூர் தபால் நிலையம் முன்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கநாதன் தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 13 பெண்கள் 24 பேரை பாடாலூர் போலீசார் கைது செய்தனர்.
வேப்பூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.கே.ராஜேந்திரன் தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 16 பெண்கள் 45 பேரை குன்னம் போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து மறியலில் ஈடுபட்டு கைதான 248 பேரையும் போலீசார் மாலையில் விடுவித்தனர்.