காய்கறிகள், பழங்களை நேரடியாக விற்பனை செய்ய வாகனங்கள் வாங்க விவசாயிகளுக்கு மானியம் விண்ணப்பிக்க 24-ந் தேதி கடைசிநாள்


காய்கறிகள், பழங்களை நேரடியாக விற்பனை செய்ய வாகனங்கள் வாங்க விவசாயிகளுக்கு மானியம் விண்ணப்பிக்க 24-ந் தேதி கடைசிநாள்
x
தினத்தந்தி 21 Jan 2023 12:15 AM IST (Updated: 21 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

காய்கறிகள், பழங்களை நுகர்வோர்களிடம் நேரடியாக விற்பனை செய்வதற்கு மானியத்தில் வாகனங்கள் வாங்க விவசாயிகள் வருகிற 24-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கடலூர்

தமிழக அரசு, விவசாயிகள் வேளாண் பொருட்களை உற்பத்தி செய்பவர்களாக மட்டும் இல்லாமல் தங்கள் விளைபொருட்களை இடைத்தரகர்களின்றி நேரடியாக நுகர்வோாிடம் விற்பனை செய்ய உழவர் சந்தை திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் பழங்களை நேரடியாக வீட்டிற்கே விற்பனை செய்த முயற்சி நுகர்வோர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதன் அடுத்தகட்டமாக இச்சேவையை விரிவுபடுத்த சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர் மற்றும் கடலூர் ஆகிய 6 மாநகராட்சிகளில் நடமாடும் வாகனங்கள் மூலம் விவசாயிகளின் தோட்டத்தில் சாகுபடியாகும் காய்கறிகள் மற்றும் பழங்களை பசுமை மாறாமல் நுகர்வோருக்கு வீடுதோறும் வழங்கிட ஏதுவாக 'பார்ம் டூ ஹோம்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

கண்காணிப்பு குழு

இத்திட்டத்தில் கிராமப்புற விவசாய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வணிகத்தினை ஊக்குவிக்கும் வகையில் நடமாடும் வாகனங்கள் வாங்குவதற்காக 40 சதவீதம் மானியம் அல்லது ரூ.2 லட்சம் நிதிஉதவி அரசு மூலம் வழங்கப்படும். இந்த நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் விளைபொருட்களுக்கு விற்பனை விலை அருகில் உள்ள உழவர் சந்தை விலையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் வாகனங்கள் வாங்குவதற்கான மானியம் பெற பயனாளிகள் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு மூலம் ேதர்வு செய்யப்படும்.

அதாவது மானியம் பெற விண்ணப்பிப்பவர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 வயது முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். சொந்த, குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகள் நிலஉடமை சான்று, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் சமர்ப்பிக்க வேண்டும். பயனாளிகளுக்கு ஒரு வாகனத்திற்கு மட்டுமே மானியம் வழங்கப்படும்.

விண்ணப்பம்

எனவே ஆர்வமுள்ள விவசாயிகள் இத்திட்டத்திற்கான விண்ணப்பத்தை வடலூர் உழவர் சந்தை அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து, வருகிற 24-ந் தேதிக்குள் (செவ்வாய்க்கிழமை) அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களை வடலூர் உழவர் சந்தை நிர்வாக அலுவலரை 8270717086 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story