ரூ.3 லட்சம் மதிப்பிலான 25 செல்போன்கள் மீட்பு


ரூ.3 லட்சம் மதிப்பிலான 25 செல்போன்கள் மீட்பு
x

தஞ்சையில், மக்கள் தவறவிட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான 25 செல்போன்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தஞ்சாவூர்

தஞ்சை மக்கள் தவறவிட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான 25 செல்போன்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

காணாமல் போன செல்போன்கள்

தஞ்சை புதிய பஸ் நிலையம், ஆர்.ஆர்.நகர், புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, சாரதாநகர், எலிசாநகர் மற்றும் மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து தர வேண்டும் என பலர் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துரசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், சைபர் கிரைம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குபேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் போலீசார், ஐ.எம்.இ.ஐ. நம்பர் மூலம் செல்போன்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதில் தஞ்சையில் காணாமல் போன செல்போன்களை திருவாரூர், திருச்சி, ஈரோடு, நாமக்கல், சென்னை உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் சிலர் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.

அதிர்ச்சி

இதையடுத்து அவர்களது செல்போன் எண்களை போலீசார் தொடர்பு கொண்டு பேசியபோது, சிலர் இந்த செல்போன்கள் கீழே கிடந்ததாகவும், சிலர் விலைக்கு வாங்கியதாகவும் தெரிவித்தனர். அவர்களிடம் இந்த செல்போன்கள் எல்லாம் காணாமல் போனதாக புகார் வரப்பெற்றுள்ளதால் செல்போன்களை ஒப்படைக்கும்படி தெரிவித்தனர்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஒரு சிலர், நாங்கள் பணம் கொடுத்து வாங்கி இருக்கிறோம். எங்களது பணத்தை ஒப்படைத்துவிட்டு செல்போனை பெற்று கொள்ளுங்கள் என கூறினர். சிலரோ செல்போன்களை நேரில் வந்தால் ஒப்படைத்துவிடுவதாக தெரிவித்தனர். செல்போன்களை ஒப்படைக்க விரும்பியவர்களிடம் போலீசார் நேரில் சென்று செல்போன்களை பெற்று கொண்டனர்.

25 செல்போன்கள் ஒப்படைப்பு

மறுப்பு தெரிவித்தவர்களிடம் சட்டம் குறித்து எடுத்து கூறி செல்போன்களை பெற்று வந்தனர். சிலர் கொரியர் மூலம் செல்போன்களை போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். மொத்தம் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 25 செல்போன்கள் மீட்கப்பட்டன.

இதையடுத்து மீட்கப்பட்ட செல்போன்களை உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் நேற்றுகாலை நடந்தது.

நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் கலந்து கொண்டு ரூ.3 லட்சம் மதிப்புள்ள 25 செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்தார்.


Next Story