ரூ.25½ கோடியில் நலத்திட்ட உதவிகள்


ரூ.25½ கோடியில் நலத்திட்ட உதவிகள்
x

புதுக்கோட்டையில் 3,391 பயனாளிகளுக்கு ரூ.25½ கோடியில் அரசின் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

புதுக்கோட்டை

நலத்திட்ட உதவிகள்

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் அரசு துறைகளின் சார்பில் 3,391 பயனாளிகளுக்கு ரூ.25 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் துறைவாரியாக மேற்கொள்ளப்படும் அரசின் திட்டங்கள் குறித்து அவர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

முன்னோடி திட்டங்கள்

கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ``முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடலின் கீழ் இந்தியாவிற்கே முன்னோடியாக எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் பல்வேறு துறைகளின் வாயிலாக செயல்படுத்தி வருகிறார். மற்ற மாநிலங்களும் பின்பற்றும் வகையில் நகர பஸ்களில் மகளிருக்கான இலவச பயணத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. குழந்தைகளின் அடிப்படை கல்வியை மேம்படுத்தும் வகையில் தொடங்கி வைக்கப்பட்ட எண்ணும் எழுத்தும் திட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே இதுபோன்ற திட்டங்கள் மூலமாக தகுதியான நபர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். ஏழை, எளிய பொதுமக்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையவும், பொதுமக்கள் அனைவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் செயலாற்ற வேண்டும்'' என்றார்.

தி.மு.க.வினர் வரவேற்பு

கூட்டத்தில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி, எம்.எல்.ஏ.க்கள் முத்துராஜா, சின்னதுரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயலட்சுமி, புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்ற துணைத்தலைவர் லியாகத் அலி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக புதுக்கோட்டை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க. நகர செயலாளர் செந்தில் தலைமையில் நகர இளைஞர் அணி அமைப்பாளர் கணேஷ் உள்பட நிர்வாகிகளால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. காரைக்குடி மார்க்கத்தில் இருந்து வந்த அவருக்கு புதுக்கோட்டை மாவட்ட எல்லையான திருமயம் சவோியார்புரத்தில் இருந்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோரிக்கை மனுக்கள்

புதுக்கோட்டை ரோஜா இல்லத்தில் தங்கி சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அதன்பின் மாலையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் பொதுமக்கள் பலர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளும் அவரை சந்தித்து மனு கொடுத்தனர். மனுக்களை அவர் பெற்றுக்கொண்டார்.


Next Story