25 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்


25 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகிற 1-ந் தேதி 25 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகிற 1-ந் தேதி 25 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.

குறைதீர்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-

விவசாயி :- பயிர்களுக்கு காப்பீடு செய்ய, இ அடங்கல் பெற்று பதிவேற்றம் செய்வதில் காலதாமதம், இழப்பீடுகள் வருவதில் காலதாமதம் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு இதில் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

கலெக்டர்:- நடப்பாண்டில் இப்பிரச்சினை இருக்காது. மேலும் பி.எம். கிசான் திட்டத்தில் வருகிற 31-ந் தேதிக்குள் முறைப்படி ஆதார் எண்ணையும், செல்போன் எண்ணையும் வங்கி கணக்குடன் இணைக்க விவசாயிகளுக்கு வலியுறுத்தப்பட்டு உள்ளது.

விவசாயி:- பண்ணை குட்டைகள் அமைத்து தர வேண்டும்.

அதிகாரி:- ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1300-க்கும் மேற்பட்ட பண்ணை குட்டைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் பண்ணை குட்டைகள் அமைக்க விரும்பினால் இந்த கூட்டத்திலேயே தெரிவிக்கலாம்.

நெல் கொள்முதல் நிலையங்கள்

விவசாயி:- ராணிப்பேட்டை மாவட்டத்தில் குளிர் பதன கிடங்கு அமைக்க வேண்டும்.

வேளாண் விற்பனை மைய துணை இயக்குனர் :- ராணிப்பேட்டை உழவர் சந்தை பகுதியில் வேளாண் விற்பனை துறையின் மூலம் 5 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனை கிடங்கு விரைவில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ளவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். தனியார்கள் குளிர்பதன கிடங்கு அமைக்க அரசு மானியம் வழங்குகிறது. விருப்பம் உள்ளவர்கள் வேளாண் அலுவலகத்தை அணுகி குளிர் பதன கிடங்கு அமைக்கலாம்.

விவசாயிகள்:- ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும்.

கலெக்டர்:- வருகிற 1-ந் தேதி முதல் மாவட்டத்தில் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். விளைச்சல் ஒரே சீராக இருந்தால் அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்படும்.

விவசாயி:- சென்னை - பெங்களூரு அதி விரைவு தேசிய நெடுஞ்சாலைப் பணிகளால் நெமிலி வட்டாரத்தில் நீர் வரத்து கால்வாய் பாதைகள் அடைக்கப்பட்டுள்ளது. சாலை அமைக்கும் போது நீர்வழித்தடங்கள் பாதிப்படையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) விஸ்வநாதன் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story