ரூ.25 லட்சத்தில் தடுப்பு சுவர் கட்ட திட்டம்
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் அந்தரத்தில் பாறைகள் தொங்கும் இடத்தில் ரூ.25 லட்சம் செலவில் தடுப்பு சுவர் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் அந்தரத்தில் பாறைகள் தொங்கும் இடத்தில் ரூ.25 லட்சம் செலவில் தடுப்பு சுவர் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்தரத்தில் தொங்கும் பாறைகள்
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக அவ்வப்போது பெய்து வருகிறது. இதனால் காட்டேரி, பர்லியார் பகுதிகளில் அவ்வப்போது மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. காட்டேரி பூங்கா பகுதியில் சில இடங்களில் பாறைகள் அந்தரத்தில் தொங்குகின்றன. இதனால் பாறைகள் எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழலாம் என்று அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
இதையடுத்து ஆபத்தான பாறைகள் உள்ள இடத்தில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செல்வம், உதவி பொறியாளர் சங்கர் தலைமையிலான அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் அங்கு எடுக்க வேண்டிய தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்தனர்.
தடுப்பு சுவர் கட்ட திட்டம்
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஏற்கனவே சாலையில் விழுந்த பாறைகள் ஓரமாக ஒதுக்கி போடப்பட்டுள்ளது. அந்த பகுதியில் தடுப்பு சுவர் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்படி பாறைகள் தொங்கும் இடத்தில் 30 மீட்டர் முதல் 40 மீட்டர் தூரத்திற்கு ரூ.25 லட்சம் செலவில் தடுப்பு சுவர் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
அங்கே தொங்கிய நிலையில் இருக்கும் பாறைகள் கடினமாக உள்ளன. பொக்லைன் எந்திரம் மூலம் அவற்றை எடுக்க முடியவில்லை. மாற்று ஏற்பாடு மூலம் அவை எடுக்கப்படும்.
இதேபோல் வேறு ஒரு சில இடங்களிலும் ஆபத்தான நிலையில் உள்ள பாறைகள் குறித்து மதிப்பிடும் பணி நடந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.