உண்டியல் காணிக்கை மூலம் ரூ.25 லட்சத்து 31 ஆயிரம் வருவாய்
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில், உண்டியல் காணிக்கை மூலம் ரூ.25 லட்சத்து 31 ஆயிரம் வருவாய் கிடைத்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. ஆண்டுதோறும் இந்த கோவிலின் மாசித்திருவிழா நடைபெறுவதற்கு முன்பும், நடைபெற்ற பிறகும் கோவிலில் உண்டியல்கள் திறக்கப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு மாசித்திருவிழாவுக்கு முன்பு உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. இந்நிலையில் மாசித்திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. இதற்கு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுரேஷ் தலைமை தாங்கினார். கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சுபாஷினி மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் முன்னிலை வகித்தனர். மொத்தம் 10 உண்டியல்கள் திறக்கப்பட்டு தன்னார்வலர்கள் மூலம் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூ.25 லட்சத்து 31 ஆயிரத்து 129, 247 கிராம் தங்கம், ஒரு கிலோ 250 கிராம் வெள்ளி ஆகியவை வருவாயாக கிடைத்தது.