பஞ்சமி நிலத்தை மீட்டு தரக்கோரி ஒரே குடும்பத்தை சேர்ந்த 25 பேர் மனு


பஞ்சமி நிலத்தை மீட்டு தரக்கோரி ஒரே குடும்பத்தை சேர்ந்த 25 பேர் மனு
x
தினத்தந்தி 27 Jun 2023 1:00 AM IST (Updated: 27 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டதில் பஞ்சமி நிலத்தை மீட்டு தரக்கோரி ஒரே குடும்பத்தை சேர்ந்த 25 பேர் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் பூங்கொடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சேக்முகைதீன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமர்நாத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, அடிப்படை வசதிகள் கேட்டு 260 பேர் மனு கொடுத்தனர். அந்த மனுக்களை பெற்றுகொண்ட கலெக்டர், அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். மேலும் 54 பேருக்கு வீட்டுமனை பட்டா, ஒரு மாற்றுத்திறனாளிக்கு இலவச தையல் எந்திரம், 14 மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாவலர் நியமனச்சான்று ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.

ஒட்டன்சத்திரம் தாலுகா அம்பிளிக்கையை சேர்ந்த விஜயன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 25 பேர் நிலத்தை மீட்டு தரக்கோரி மனு கொடுத்தனர். அதில், எங்கள் தாத்தாவின் பெயரில் இருந்த பஞ்சமி நிலத்தை ஒருவர் எழுதி வாங்கி உள்ளார். எங்கள் தாத்தாவின் வாரிசுகளான 60 பேர் சிரமத்தில் இருக்கிறோம். எனவே நிலத்தை மீட்டு எங்களுக்கு தரவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதேபோல் திண்டுக்கல்லை அடுத்த ஏர்போர்ட் நகரை சேர்ந்த மக்கள் கொடுத்த மனுவில், நாங்கள் கடந்த 13 ஆண்டுகளாக வழிபாடு செய்து வந்த கோவில்களை சிலர் இடித்து விட்டனர். இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.


Next Story