வெறி நாய் கடித்து குதறியதில் 25 பேர் காயம்
வேலூரில் வெறி நாய் கடித்து குதறியதில் 25 பேர் காயமடைந்தனர்.
வெறிநாய் கடித்தது
வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவைகள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளையும், நடந்து செல்லும் பாதசாரிகளுக்கும் இடையூறு ஏற்படுத்துகின்றன. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளை அச்சுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவிலுக்கு ஏராளமானவர்கள் வந்திருந்தனர். மேலும் அங்கு பஸ் நிறுத்தத்திலும் பொதுமக்கள் பலர் நின்றிருந்தனர். அப்போது அங்கு வந்த வெறிநாய் ஒன்று திடீரென அங்கிருந்த பொதுமக்களை கடிக்க தொடங்கியது. ஒருவரை அடுத்து ஒருவரை விடாமல் துரத்திச்சென்று கடித்தது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அலறடித்து ஓடினர்.
சிலர், நாயை அங்கிருந்து விரட்ட முயன்றனர். எனினும் நாய் அவர்களை விடாமல் கடித்தது. நடந்து சென்றவர்கள் மட்டுமில்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களையும் பதம் பார்த்தது. பொதுமக்கள் திரண்டு விரட்டியதும் அந்த நாய் அங்கிருந்து சர்வீஸ் சாலை வழியாக ஓடியது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
25 பேர் காயம்
சுமார் 20 பேரை நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதில் கோகுல் (22), சரவணன் (30), வரதராஜ் (65), முருகன் (68), சரவணன் (38), ஜெயலட்சுமி (72), கணசேன் (48), ராமலிங்கம் (64), பஹர்நிஷா (60) ஆகியோர் அருகில் உள்ள சத்துவாச்சாரி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று ஊசி போட்டுக் கொண்டனர். மேலும் சிலர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர்.
இதையடுத்து இரவு 9 மணி அளவில் மீண்டும் அங்கு வந்த அந்த வெறிநாய் சாலையில் சென்ற 22 வயது இளம்பெண் உள்ளிட்ட மேலும் 5 பேரை கடித்தது. இதுகுறித்து வேலூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மாநகராட்சி ஊழியர்கள் அந்த பகுதியில் வெறிநாயை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தினர்.
பொதுமக்களை நாய் கடித்து குதறிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சத்துவாச்சாரி பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.