சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் நிலப்பிரச்சினையில் 25 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


நிலப்பிரச்சினை தொடர்பாக 25 பேர் ஒரேேநரத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம்

தீக்குளிக்க முயற்சி

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் வந்து மனுக்களை அளித்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் நல்லாகவுண்டம்பட்டி புதுக்காலனி பகுதியை சேர்ந்தவர் வையாபுரி. கூலித்தொழிலாளி. இவருடைய குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 15 பேர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் நுழைவுவாயில் பகுதியில் நின்று கொண்டு 2 கேன்களில் வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து உடல்களில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடி வந்து அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து சமாதானப்படுத்தினர்.

இதையடுத்து தீக்குளிக்க முயன்றவர்கள் கூறுகையில், வையாபுரியின் நிலத்தை அபகரித்த கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதனை தொடர்ந்து தீக்குளிக்க முயன்ற 15 பேரையும் போலீசார் ஆட்டோவில் ஏற்றி டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

கலெக்டரிடம் மனு

இதுதொடர்பாக வையாபுரி மற்றும் அவரது குடும்பத்தினர் கலெக்டர் கார்மேகத்திடம் ஒரு புகார் மனுவை அளித்தனர். அதில் பாகல்பட்டி பகுதியில் எங்களுக்கு சொந்தமான 25 சென்ட் பூர்வீக நிலம் உள்ளது. அந்த நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வந்தோம். ஆனால் அந்த நிலத்தை சிலர் அபகரிக்க முயற்சி செய்கின்றனர். இதற்கு அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் ஆதரவாக செயல்படுகிறார். ரூ.30 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு பணம் கொடுக்காவிட்டால் அந்த நிலத்தில் வசிக்க முடியாது என்று மிரட்டல் விடுக்கின்றனர். இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலர் அடியாட்களுடன் வந்து வீட்டை இடித்துவிட்டு பொருட்களை அள்ளி சென்றுவிட்டனர். இதனால் தற்போது குடியிருக்க வீடு இல்லாமல் நாங்கள் பரிதவித்து வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம், போலீசார் இணைந்து எங்களுக்கு சொந்தமான 25 சென்ட் நிலத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

மற்றொரு சம்பவம்

சங்ககிரி அடுத்த இடங்கணசாலை பகுதியை சேர்ந்தவர் ராஜூ. இவருடைய மகன்கள், மருமகள் உள்பட 10 பேர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை உடல்களில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து எதற்காக தீக்குளிக்க முயன்றீர்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

நிலம் அபகரிப்பு

இதுகுறித்து ராஜூ கண்ணீர் மல்க கூறுகையில், எனது தந்தைக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தை நானும், எனது தம்பி சித்தனும் தலா 6 ஏக்கர் என பிரித்து கொண்டோம். ஆனால் தம்பியின் மகன் எங்களுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்து கொண்டு கொலை மிரட்டல் விடுக்கிறார். இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கலெக்டர் அலுவலகத்துக்கு குடும்பத்தினருடன் தீக்குளிக்க வந்தோம் என்றார். இதனை தொடர்ந்து ராஜூ உள்பட குடும்பத்தினர் டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நிலப்பிரச்சினையில் ஒேர ேநரத்தில் 2 குடும்பங்களை சேர்ந்த 25 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story