காளை விடும் விழாவில் மாடுகள் முட்டி 25 பேர் காயம்


காளை விடும் விழாவில் மாடுகள் முட்டி 25 பேர் காயம்
x

மருதவல்லிபாளையம் கிராமத்தில் நடந்த காளைவிடும் விழாவில் மாடுகள் முட்டி 25 பேர் காயமடைந்தனர்.

வேலூர்

25 பேர் காயம்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா மருதவல்லி பாளையம் அண்ணாநகரில் காளை விடும் விழா நேற்று நடந்தது. காளைகளை பொய்கை கால்நடை மருத்துவர்கள் லாவண்யா மயிலா, மோகன் குமார் ஆகியோர் பரிசோதனை செய்த பிறகு விழா தொடங்கியது. அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மீராப்பென் காந்தி மற்றும் துணைத் தாசில்தார் ராமலிங்கம், விரிஞ்சிபுரம் சப்- இன்ஸ்பெக்டர் ரவி, ஊராட்சி மன்ற தலைவர் பாபுஜி, துணைத்தலைவர் சகுந்தலா ரவிக்குமார், எம்.ஜி. சசிதரன் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்று கொடியசைத்து விழாவை தொடங்கி வைத்தனர்.

விழாவில் 215 காளைகள் பங்குபெற்று சீறிப்பாய்ந்து ஓடின. அப்போது அங்கு நின்றிருந்தவர்களை தூக்கி வீசியது. இதில் 25-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவர் கரிஷ்மா, மருத்துவ ஆய்வாளர் உமா ஆகியோர் கொண்ட குழுவினர் சிகிச்சைகள் அளித்தனர். மாடு முட்டியதில் குடியாத்தத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் சுரேஷ் (வயது 40) என்பவர் படுகாயமடைந்தார்.

தடுப்புகளை உடைத்த காளை

அவருக்கு உடனடியாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் உடல்நிலை மிகவும் மோசமானதால் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலத்த காயமடைந்த நான்கு பேரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரு காளை அதிவேகமாக ஓடி தடுப்பு கம்புமீது மோதி காயம் ஏற்பட்டது. மற்றொரு காளை ஓடு பாதையில் இருபுறமும் கட்டியிருந்த தடுப்பு கம்புக்குள் புகுந்து கடைகளை சூறையாடியது. கிராம நிர்வாக அலுவலர், ஒன்றிய கவுன்சிலர் பகவதி பிரகாஷ், முன்னாள் ஒன்றிய செயலாளர் செங்குட்டவன், பெருமாள் உள்ளிட்டோர் விழாவை கண்காணித்தனர். 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் 70-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முதல் பரிசாக ரூ.70 ஆயிரம், இரண்டாம் பரிசு 50 ஆயிரம், மூன்றாவது பரிசு 40 ஆயிரம், 4-வது பரிசு ரூ.30 ஆயிரம் என 51 பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மருதுவல்லிபாளையம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story